வாலிபருக்கு தாலிகட்டி 4 ஆண்டுகளாக குடும்பம் நடத்திய நகைப்பட்டறை ஊழியர்
கோவை அருகே திருமணத்தை மறைத்து வாலிபருக்கு தாலிகட்டி 4 ஆண்டுகளாக குடும்பம் நடத்திய நகைப்பட்டறை ஊழியர் ரூ.6½ லட்சம் மோசடி செய்துவிட்டதாகவும், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீசில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.
கோவை
கோவை அருகே திருமணத்தை மறைத்து வாலிபருக்கு தாலிகட்டி 4 ஆண்டுகளாக குடும்பம் நடத்திய நகைப்பட்டறை ஊழியர் ரூ.6½ லட்சம் மோசடி செய்துவிட்டதாகவும், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீசில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.
சமையல் தொழிலாளி
கோவை அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 27 வயதான வாலிபர் சமையல் வேலை செய்து வருகிறார். இவர் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகம் மற்றும் செல்வபுரம் போலீசில் அளித்த புகார் மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-
எனக்கும், செல்வபுரத்தை சேர்ந்த 27 வயதான நகைப்பட்டறை ஊழியருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டது. எனக்கு பெண்மை தன்மை கொண்ட சுபாவம் உண்டு. இதை என்னுடன் பழகிய நண்பர் தெரிந்து கொண்டார்.
தாலி கட்டினார்
இதனால் அவர் என்னிடம் நாம் தாலி கட்டி கணவன்-மனைவி போன்று ஒன்றாக வாழலாம் என்று கூறினார். இதை நான் ஏற்றுக்கொண்டேன். இதையடுத்து அவர் எனது அறையில் வைத்து எனது கழுத்தில் தாலி கட்டினார். அதன் பிறகு அவர் என்னிடம் பாலியல் உறவும் வைத்துக்கொண்டார்.பின்னர் அவர் திடீரென்று நான் நகை பட்டறை வைக்க போகிறேன், எனக்கு பணம் தேவைப்படுகிறது என்று கேட்டார். உடனே நான் என்னிடம் இருந்த பணத்தை அவரிடம் கொடுத்தேன். இப்படி என்னிடம் இருந்து பல்வேறு தவணைகளாக ரூ.6½ லட்சம் வாங்கினார்.
நடவடிக்கை எடுக்க வேண்டும்
அதன் பின்னர் அவர் எனது அறைக்கு வருவது இல்லை. நான் அவருடைய செல்போனுக்கு தொடர்பு கொண்டாலும் என்னுடன் பேசுவதை தவிர்த்து வந்தார். உடனே நான் விசாரித்தபோது அவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் இருப்பது தெரியவந்தது.எனவே திருமணத்தை மறைத்து, எனக்கு தாலிகட்டி வாழ்க்கை நடத்தி என்னிடம் இருந்து ரூ.6½ லட்சத்தை மோசடி செய்த நகைப்பட்டறை ஊழியர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன் அந்த பணத்தை எனக்கு திரும்ப பெற்றுக்கொடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.
மனுவை பெற்றுக்கொண்ட போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.