ஓட, ஓட விரட்டி வாலிபர் வெட்டிக்கொலை
ஓட, ஓட விரட்டி வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
வெட்டிக்கொலை
திருச்சி உறையூர் சன்னதி தெருவை சேர்ந்தவர் முருகன். இவருடைய மகன் சண்முகம் (வயது 25). குதிரை வண்டி வைத்திருந்த இவர், பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று குதிரை வண்டி பந்தயங்களில் கலந்து கொள்வது வழக்கம். இவர் நேற்று பகல் 12.30 மணியளவில் குழுமணி டாக்கர் ரோடு பகுதியில் நடந்து சென்றார். அப்போது அங்கு 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 4 பேர் அவரை வழிமறித்து அரிவாளால் வெட்டினர்.
இதைக்கண்ட பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். மேலும் சண்முகம் அங்கிருந்து தப்பி ஓடி அந்த பகுதியில் உள்ள ஒரு கடைக்குள் புகுந்தார். ஆனாலும் அந்த கும்பல் அவரை விடாமல் ஓட, ஓட விரட்டிச்சென்று, சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டினர். இதில் சண்முகம் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றது.
4 பேருக்கு வலைவீச்சு
இது பற்றி தகவல் அறிந்து அங்கு வந்த உறையூர் போலீசார், சண்முகத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து உறையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தினார்கள். முதல்கட்ட விசாரணையில், சண்முகம் ஊர், ஊராக சென்று குதிரை வண்டி பந்தயத்தில் கலந்து கொண்டது தெரியவந்தது.
இதில் பந்தயத்துக்கு சென்ற இடத்தில் தகராறு நடந்து, அதனால் ஏற்பட்ட முன்விரோதத்தில் அவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதும் காரணமா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும், அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளையும் ஆய்வு செய்து, தப்பிய ஓடிய 4 பேரை வலைவீசி தேடி வருகிறார்கள்.
உறையூரில் நேற்று பட்டப்பகலில் பொதுமக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியில் நடந்த இந்த கொலை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.