வாலிபர் சரமாரி வெட்டிக்கொலை


வாலிபர் சரமாரி வெட்டிக்கொலை
x

உவரி அருகே வாலிபர் சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக தலைமறைவான அண்ணன்- தம்பிகள் உள்பட 4 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

திருநெல்வேலி

திசையன்விளை:

உவரி அருகே வாலிபர் சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக தலைமறைவான அண்ணன்- தம்பிகள் உள்பட 4 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

மீன்பிடி தொழிலாளி

நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உவரியை அடுத்த கூட்டப்பனை கீழத்தெருவைச் சேர்ந்தவர் சுடலைமாடன். இவருடைய மகன் சுபாஷ் என்ற மணி (வயது 26).

மீன்பிடி தொழிலாளியான இவர் உவரியைச் சேர்ந்த மற்றொரு சமுதாயத்தைச் சேர்ந்த ரசிகா என்ற இளம்பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

வெட்டிக்கொலை

இந்த நிலையில் உவரியில் நடந்த கிறிஸ்தவ ஆலய திருவிழாவையொட்டி, கடந்த சில நாட்களுக்கு முன்பு ரசிகா அங்குள்ள தனது பெற்றோரின் வீட்டுக்கு குழந்தைகளுடன் சென்றார். இதனால் கூட்டப்பனையில் சுபாஷ் மட்டும் தனியாக வசித்து வந்தார்.

நேற்று காலையில் சுபாஷ் தனது வீட்டின் பின்புறம் உள்ள காட்டுப்பகுதியில் உடலில் பலத்த அரிவாள் வெட்டுக்காயங்களுடன் பிணமாக கிடந்தார். அந்த வழியாக சென்றவர்கள் இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து, உவரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீசார் விரைந்தனர்

உடனே வள்ளியூர் துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) மீனாட்சிநாதன், உவரி இன்ஸ்பெக்டர் பிரேமா, சப்-இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர்.

கொலையாளிகள் பற்றி துப்பு துலக்குவதற்காக மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அது, கொலை நடந்த இடத்தில் மோப்பம் பிடித்து விட்டு, அப்பகுதியைச் சேர்ந்த ஒருவரது வீட்டை நோக்கி ஓடியது. எனினும் அது யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. இறந்த சுபாஷின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

காரணம் என்ன?

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், சுபாசுக்கும், அதே ஊரைச் சேர்ந்த டெல்வர் மகன் மீனவர் ராஜாவுக்கும் (32) இடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்தது. இதையடுத்து சுபாஷை தீர்த்துக்கட்ட வேண்டும் என்று கருதிய ராஜா நேற்று முன்தினம் தனது நண்பர் ஒருவர் மூலம் சுபாஷை தொடர்பு கொண்டு பகைமையை மறந்து நட்பாக இருக்கலாம் என்று கூறி அவரை தனது வீட்டுக்கு வருமாறு அழைத்தார்.

இதனை உண்மை என்று நம்பிய சுபாஷ் இரவில் ராஜாவின் வீட்டுக்கு சென்றார். பின்னர் அங்கு ராஜா மற்றும் அவருடைய சகோதரர்கள், நண்பர் ஆகியோருடன் சேர்ந்து சுபாஷ் மது அருந்தியதாக கூறப்படுகிறது. அப்போது மது போதையில் இருந்த சுபாஷை ராஜா உள்ளிட்டவர்கள் அரிவாளால் சரமாரியாக வெட்டிக்கொலை செய்ததாக கூறப்படுகிறது. பின்னர் சுபாஷின் உடலை தூக்கிச் சென்று, அவரது வீட்டின் பின்புறம் உள்ள காட்டுப்பகுதியில் வீசிச் சென்றது தெரியவந்தது.

4 பேருக்கு வலைவீச்சு

இதையடுத்து தலைமறைவான ராஜா, அவருடைய தம்பிகள் தீபன், பிரவீன் உள்ளிட்ட 4 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

இறந்த சுபாசுக்கு பூர்வீக ஊர், உவரி அருகே உள்ள வெம்மணங்குடி ஆகும். உவரி அருகே வாலிபர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட பயங்கர சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story