மோட்டார்சைக்கிளில் சாகசம் செய்ய முயன்று தவறி விழுந்த வாலிபர் காயம்


மோட்டார்சைக்கிளில் சாகசம் செய்ய முயன்று தவறி விழுந்த வாலிபர் காயம்
x
தினத்தந்தி 2 Oct 2022 12:15 AM IST (Updated: 2 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

காரைக்குடி கல்லூரி சாலையில் மோட்டார்சைக்கிளில் பின்னால் அமர்ந்து வந்த வாலிபர் ஒருவர் மாணவிகள் முன்பு பந்தா காட்ட முயற்சித்தபோது நிலை தடுமாறி கீழே விழுந்து லேசான காயத்துடன் உயிர் தப்பிய சம்பவம் சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது.

சிவகங்கை

காரைக்குடி

காரைக்குடி கல்லூரி சாலையில் மோட்டார்சைக்கிளில் பின்னால் அமர்ந்து வந்த வாலிபர் ஒருவர் மாணவிகள் முன்பு பந்தா காட்ட முயற்சித்தபோது நிலை தடுமாறி கீழே விழுந்து லேசான காயத்துடன் உயிர் தப்பிய சம்பவம் சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது.

சாலையில் சாகசம்

இன்றைய காலக்கட்டத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் வாலிபர்கள் நகர் பகுதிகளில் தங்களை 2 கே கிட்ஸ், புள்ளிங்கோ எனக்கூறிக்கொண்டு பல்வேறு அட்டகாசங்களை செய்து வருகின்றனர். இந்த புள்ளிங்கோக்கள் தங்களது பெற்றோரிடம் இருந்து விலை உயர்ந்த மோட்டார் சைக்கிளை அடம்பிடித்து வாங்கிக்கொண்டு அதில் அசுர வேகத்தில் செல்வது, வீலிங் செய்வது என தொடர்ந்து அட்டகாசங்கள் செய்கின்றனர்.

அதேபோல பஸ்களிலும், ரெயில்களிலும் படிக்கட்டுகளில் தொங்கி கொண்டு விபரீத விளையாட்டுகளில் ஈடுபட்டு வருகின்றனர். சில சமயங்களில் போலீசாரும் அவர்களை பிடித்து அபராதம் விதித்து பல்வேறு அறிவுரைகளை வழங்கினாலும் கூட அவர்கள் திருந்தியபாடில்லை.

ஹீரோயிசம்

இந்நிலையில் காரைக்குடி கல்லூரி சாலையில் கல்லூரி விடும் நேரத்தில் அழகப்பா போலீஸ் நிலையம் அருகே உள்ள பஸ் நிறுத்தத்தில் கல்லூரி மாணவிகள் ஏராளமானோர் வீடு செல்வதற்காக பஸ்சுக்காக காத்திருந்தனர். அப்போது அந்த வழியாக 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 4 வாலிபர்கள் மாணவிகளை பார்த்ததும் உற்சாகமடைந்தனர். அதில் முன்னாள் சென்ற மோட்டார் சைக்கிகளில் 2 பேர் அமர்ந்திருந்த நிலையில் அந்த கல்லூரி மாணவிகள் நிற்கும் இடம் வந்ததும் பின்னே அமர்ந்திருந்த வாலிபர் திடீரென மோட்டார் சைக்கிள் மீது ஏறி நின்று மாணவிகளிடம் பந்தா காட்ட முயற்சி செய்தார். அந்தநேரம் அவர் நிலை தடுமாறி சாலையில் கீழே விழுந்தார்.

உயிர் தப்பினார்

அதிர்ஷ்டவசமாக அந்தநேரம் பின்னால் எந்தவித வாகனங்களும் வராததால் அந்த வாலிபர் லேசான காயத்துடன் உயிர் தப்பினார். இவ்வாறு அந்த வாலிபர் மோட்டார் சைக்கிளில் ஏறி நிற்கும் போது கீழே விழும் காட்சிகளை பின்னால் வந்த வாலிபர் ஒருவர் தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்து அதை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்தார். தற்போது அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. ஏற்கனவே இதேபோல் கடந்த சில மாதங்களுக்கு முன்பு காரைக்குடி அருகே கோட்டையூர் பஸ் நிறுத்தம் பகுதியில் பள்ளி முடிந்து வீட்டிற்கு செல்வதற்காக பஸ் நிலையத்தில் நின்றுகொண்டிருந்த மாணவிகள் முன்பு 2 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் வீலிங் செய்யும் போது நிலை தடுமாறி நடுரோட்டில் விழுந்து எழுந்து சென்றனர். அப்போது போலீசார் விசாரணை செய்து அவர்களை கண்டுபிடித்து எச்சரித்து அனுப்பினர்.

தற்போது மீண்டும் காரைக்குடியில் வாலிபர் மோட்டார் சைக்கிளில் சாகசம் செய்ய முயன்ற போது கீழே விழுந்து சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியளிக்கும் வகையில் உள்ளது. இந்த வீடியோவை வைத்து அழகப்பாபுரம் போலீசார் அந்த வாலிபர்களை தேடி வருகின்றனர். இதற்கிடையே இந்த சம்பவம் தொடர்பாக அழகப்பா போலீசார் விசாரணை நடத்தி அந்த கல்லூரி மாணவர்கள் 4 பேரையும் கண்டுபிடித்தனர். பின்னர் அவர்களை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story