விபத்தில் வடமாநில வாலிபர் பலி
பரமத்தியில் விபத்தில் வடமாநில வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
பரமத்திவேலூர்
பீகார் மாநிலம், பாஜ்பூர் பார்பிக் பகுதியை சேர்ந்தவர் முகமது குல்ஜார். இவரது மகன் முகமது சாகித் (வயது 24). கூலித்தொழிலாளி. இவர் நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் தாலுகா, பரமத்தியில் உள்ள முதலியார் தெருவில் வசித்து வந்தார். இந்தநிலையில் கடந்த 6-ந் தேதி இரவு முகமது சாகித், கந்தசாமி என்பவருக்கு சொந்தமான மோட்டார் சைக்கிளை எடுத்துக் கொண்டு பரமத்தியில் உள்ள ஒரு கடைக்கு பொருட்கள் வாங்க சென்றுள்ளார். பரமத்தியில் இருந்து மாணிக்கநத்தம் சாலையில் சென்று கொண்டிருந்த போது அந்த பகுதியில் இருந்த வேகத் தடையில் மோதி மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்துள்ளார். இதில் தலையில் படுகாயம் அடைந்த முகமது சாகித்தை அந்த வழியாக வந்தவர்கள் மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த முகமது சாதிக் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து பரமத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.