நாகர்கோவில் அருகே பயங்கரம்: வாலிபர் கழுத்தை அறுத்து படுகொலை;ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை


நாகர்கோவில் அருகே பயங்கரம்: வாலிபர் கழுத்தை அறுத்து படுகொலை;ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை
x

நாகர்கோவில் அருகே வாலிபர் கழுத்தை அறுத்து படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக ஒருவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கன்னியாகுமரி

திங்கள்சந்தை,

நாகர்கோவில் அருகே வாலிபர் கழுத்தை அறுத்து படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக ஒருவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த பயங்கர சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது:-

படுகொலை

நாகர்கோவில் அருகே சுங்கான்கடை பகுதியில் புதிதாக அமைக்கப்பட உள்ள நான்கு வழிச்சாலை பணி நடந்து வருகிறது. அங்குள்ள குலாளர் தெரு அருகில் டாஸ்மாக் கடை உள்ளது.

டாஸ்மாக் கடையில் மதுவாங்கும் வாலிபர்கள் நான்கு வழிச்சாலை பணி நடைபெறும் பகுதிக்கு சென்று மது குடிப்பது வழக்கம். அதே போல் நேற்று இரவு சிலர் மது வாங்கி சென்று குடித்தனர்.

அப்போது திடீரென்று அலறல் சத்தம் கேட்டது. உடனே அக்கம்-பக்கத்தில் இருந்தவர்கள் சத்தம் வந்த இடத்துக்கு ஓடி சென்று பார்த்தனர். அப்போது அங்கு சுமார் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் கழுத்தை அறுத்து படுகொலை செய்யப்பட்டு கிடந்தார். ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை பார்க்க கூட்டம் கூடியது. கூட்டத்தை கண்டதும் அப்பகுதியில் மறைந்திருந்த 3 வாலிபர்கள் தப்பி ஓடினர்.

ஒருவர் பிடிபட்டார்

உடனே அங்கு திரண்டு இருந்தவர்கள் 3 பேரையும் துரத்தி சென்றனர். அதில் 2 பேர் தப்பி ஓடி விட்டனர். ஒருவர் மட்டும் சிக்கினார். அவரை பிடித்து வைத்து கொண்டு இரணியல் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

உடனே போலீஸ் சூப்பிரண்டு ஹரி கிரண் பிரசாத், குளச்சல் துணை போலீஸ் சூப்பிரண்டு தங்கராமன், இரணியல் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) கிறிஸ்டி, சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டு, விசாரணை நடத்தினர்.

அப்போது இறந்து போன வாலிபர் யார்?் என்பது தெரியவில்லை. அவருக்கு 30 வயது இருக்கும். பொதுமக்களிடம் பிடிபட்ட வாலிபர் குருந்தன்கோட்டை அடுத்த முக்கலம்பாட்டை சேர்ந்த அசோக் (வயது25) என்பதும், தப்பி ஓடியவர்களில் ஒருவர் அதே பகுதியை சேர்ந்த அஜின் ஜோஸ் என்பதும் தெரிய வந்தது. தப்பி ஓடிய மற்றொரு வாலிபர் யார்? என்பது தெரியவில்லை. போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் வில்லுக்குறி கிராம நிர்வாக அலுவலர் மணிகண்டன் இரணியல் போலீசில் புகார் செய்தார். அதே சமயம் வாலிபர் இறந்து கிடந்த இடத்தின் அருகே கத்தி உறை ஒன்று சிக்கியது.

போலீஸ் சூப்பிரண்டு

இந்த கொலை குறித்து போலீஸ் சூப்பிரண்டு ஹரி கிரண் பிரசாத்திடம் கேட்ட போது, அவர் கூறியதாவது:-

கொலை குறித்து நடத்திய முதல் கட்ட விசாரணையில் 3 பேர் சேர்ந்து மது அருந்தும் போது ஏற்பட்ட தகராறில் இந்த கொலை நடந்ததாக தெரிய வந்துள்ளது. இறந்தவர் யார்? என்று தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த கொலை அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story