வாலிபருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து புதுக்கோட்டை மகிளா கோர்ட்டு தீர்ப்பளித்தது.
3 ஆண்டுகள் சிறை
புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர் வைரமணி (வயது 31). இவர் 9-ம் வகுப்பு படித்து வந்த 14 வயதுடைய சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தார். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் கடந்த ஏப்ரல் மாதம் 18-ந் தேதி கீரனூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து வைரமணியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கு புதுக்கோட்டை மகிளா கோர்ட்டில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சத்யா நேற்று தீர்ப்பு வழங்கினார். இதில் வைரமணிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.75 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு தரப்பில் ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க அரசுக்கு உத்தரவிட்டார்.
பாராட்டு
இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் யோகமலர் ஆஜராகி வாதாடினார். வழக்கில் புலன் விசாரணை செய்த கீரனூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் லதா மற்றும் கோர்ட்டு பணி ஏட்டு சீதாலட்சுமி ஆகியோரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே பாராட்டினார்.