வாலிபருக்கு வாழ்நாள் முழுவதும் சிறை தண்டனை
சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு வாழ்நாள் முழுவதும் சிறை தண்டனை விதித்து திருவண்ணாமலை போக்சோ சிறப்பு கோர்ட்டு தீர்ப்பளித்தது.
சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு வாழ்நாள் முழுவதும் சிறை தண்டனை விதித்து திருவண்ணாமலை போக்சோ சிறப்பு கோர்ட்டு தீர்ப்பளித்தது.
பாலியல் பலாத்காரம்
வந்தவாசி தாலுகா இந்திரா நகரை சேர்ந்தவர் இலியாஸ் (வயது 23). இவருக்கு 15 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அச்சிறுமி அவரது நண்பர் ஒருவருக்கு பரிசு வாங்கி கொடுப்பதற்காக இலியாசிடம் பணம் கேட்டு உள்ளார்.
பணத்தை தருவதாக கூறி கடந்த 2020-ம் ஆண்டு ஜூலை மாதம் 26-ந் தேதி அவர் சிறுமியை அந்த பகுதியில் உள்ள சவுக்கு தோப்பிற்கு வரவழைத்து உள்ளார்.
அங்கு இலியாஸ் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து உள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட சிறுமி இதுகுறித்து அவரது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் வந்தவாசி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.
அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி அவரை கைது செய்தனர். மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
வாழ்நாள் முழுவதும் சிறை தண்டனை
இந்த வழக்கு தொடர்பான விசாரணை திருவண்ணாமலை மாவட்ட ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் உள்ள போக்சோ வழக்குகளுக்கான சிறப்பு கோர்ட்டில் நடைபெற்று வந்தது.
இந்த நிலையில் இவ்வழக்கை விசாரித்த நீதிபதி பார்த்தசாரதி இன்று தீர்ப்பு கூறினார்.
சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த இலியாசுக்கு வாழ்நாள் முழுவதும் சிறை தண்டனையும், ரூ.5 லட்சத்து 5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.
மேலும் இவ்வழக்கில் தொடர்புடையவர்களாக கைது செய்யப்பட்ட 2 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.
தண்டனை பெற்ற இலியாசை போலீசார் வேலூர் மத்திய சிறையில் அடைந்தனர்.