வாலிபருக்கு கத்திக்குத்து
ஆத்தூரில் வாலிபருக்கு கத்திக்குத்து விழுந்தது.
ஆறுமுகநேரி:
தூத்துக்குடி ஆண்டாள் தெருவை சேர்ந்தவர் சுப்பையா மகன் வினோத்குமார் (வயது 28). டிப்ளமோ மெக்கானிக் முடித்துள்ள இவர் தற்போது ஆத்தூரில் வசித்து வருகிறார். இவருக்கு மனைவியும், ஒரு மகனும் உள்ளனர். இந்தநிலையில் வினோத்குமார் நேற்று தனது நண்பரின் திருமணத்திற்கு சென்றார். மண்டபம் முன்பு நின்று கொண்டு இருந்தபோது ஆத்தூர் புலியடி தெருவை சேர்ந்த சங்கர பெருமாள் மகன் சங்கர் (24) என்பவர் முன் விரோதம் காரணமாக தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் வினோத்குமார் கழுத்தில் குத்தியுள்ளார். அதை வினோத்குமார் தடுத்தபோது கை விரல்களிலும் வெட்டு காயம் ஏற்பட்டது. அவர் சத்தம் போடவே சங்கர் தப்பி ஓடிவிட்டார்.
உடனடியாக வினோத் குமாரை மீட்டு ஆத்தூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் ஆத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சங்கரை கைது செய்தனர்.