நத்தத்தில் வாலிபர் குத்திக்கொலை
நத்தத்தில் வாலிபரை கத்தியால் குத்திக்கொலை செய்த தொழிலாளி கைது செய்யப்பட்டார்.
நத்தம் காமராஜர் நகரை சேர்ந்தவர் விஜயன். இவருடைய மகன் விஷ்ணு (வயது 26). டிப்ளமோ என்ஜினீயர். இவர், தனது வீட்டில் ஒரு நாயை வளர்த்து வந்தார். அதே பகுதியை சேர்ந்தவர் முத்து (38). கூலித்தொழிலாளி. இவர் தனது வீட்டில் ஒரு கோழி வளர்த்து வருகிறார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று முத்துவின் வீட்டருகே அவர் வளர்த்து வரும் கோழி இரைதேடிக்கொண்டிருந்தது. அப்போது அங்கு வந்த விஷ்ணுவின் நாய் கோழியை கடித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அறிந்த முத்து, நேற்று காலை விஷ்ணுவிடம் கோழியை நாய் கடித்தது குறித்து கேட்டு தகராறில் ஈடுபட்டார்.
குத்திக்கொலை
தகராறு முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த முத்து, தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் விஷ்ணுவை சரமாரியாக குத்திவிட்டு சென்றுவிட்டார். படுகாயமடைந்த விஷ்ணு ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்து விழுந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். அவரை அக்கம்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக நத்தம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி விஷ்ணு பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து நத்தம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கமுனியசாமி, சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, வாலிபரை குத்திக்கொன்ற முத்துவை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.