காதில் புளூடூத் அணிந்து டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதிய வாலிபர் - வலை வீசி தேடும் போலீசார்..!


காதில் புளூடூத் அணிந்து டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதிய வாலிபர் - வலை வீசி தேடும் போலீசார்..!
x
தினத்தந்தி 30 May 2023 2:50 AM GMT (Updated: 30 May 2023 4:13 AM GMT)

ஒருங்கிணைந்த பொறியில் பணிக்கான தேர்வை வாலிபர் ஒருவர் புளூடூத் ஏர்பட்ஸ் வைத்து எழுதியது கண்டு பிடிக்கப்பட்டது.

வேலூர்,

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் ஒருங்கிணைந்த பொறியியல் பணிக்கான தேர்வு நேற்று முன்தினம் நடந்தது. வேலூரை அடுத்த காட்பாடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த தேர்வில் விருதம்பட்டை சேர்ந்த அப்துல் பயாஸ் (வயது 27) என்ற வாலிபர் தேர்வு எழுத சென்றார். அவர் தேர்வு அறைக்கு செல்லும் போது வலது காதில் கட்டுடன் சென்றார். அறையின் சூப்பர்வைசர் கேட்டதற்கு வலது காதில் அடிபட்டதால் கட்டு போடப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

அவரை தேர்வு எழுத அனுமதித்தினர். ஆனால் சிறிது நேரத்தில் அவர் யாருடனோ பேசுவது போல் தெரிந்தது. உடனே அறை சூப்பர்வைசர் அவரை காதில் இருந்த கட்டை பிரிக்க சொன்னார். கட்டைப் பிரித்து பார்த்த போது காதில் புளூடூத் ஏர்பட்ஸ் இருந்தது தெரியவந்தது. அதன் வழியாக அவர் யாரிடமோ கேட்டு தேர்வு எழுதியது கண்டு பிடிக்கப்பட்டது.

இந்த சம்பவம் குறித்து தேர்வு அறை கண்காணிப்பாளர் சரளா காட்பாடி போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சிலம்பரசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். மேலும் தலைமறைவாக உள்ள அப்துல் பயாசை வலைவீசி போலீசார் தேடி வருகின்றனர். ஒருங்கிணைந்த பொறியியல் பணிக்கான தேர்வை வாலிபர் நூதனமான முறையில் புளூடூத் பயன்படுத்தி எழுதியது காட்பாடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story