கால் முறிவுக்கு சிகிச்சை பெற்று வந்த வாலிபர், மதுரை ஆஸ்பத்திரியில் இருந்து தப்பி ஓட்டம்


கால் முறிவுக்கு சிகிச்சை பெற்று வந்த வாலிபர்,  மதுரை ஆஸ்பத்திரியில் இருந்து தப்பி ஓட்டம்
x

கடற்கரையில் பாலியல் பலாத்கார வழக்கில் கைதாகி, கால் முறிவுடன் சிகிச்சை பெற்று வந்த வாலிபர் திடீரென மதுரை அரசு ஆஸ்பத்திரியில் இருந்து தப்பி ஓடினார்.

மதுரை

கடற்கரையில் பாலியல் பலாத்கார வழக்கில் கைதாகி, கால் முறிவுடன் சிகிச்சை பெற்று வந்த வாலிபர் திடீரென மதுரை அரசு ஆஸ்பத்திரியில் இருந்து தப்பி ஓடினார்.

பலாத்கார வழக்கில் கைது

கடந்த மார்ச் மாதம் ராமநாதபுரம் மாவட்டம் மூக்கையூர் கடற்கரை பகுதியில், காதலனை கட்டிப்போட்டு ஒரு கும்பலால் மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். அந்த கும்பலை பிடிக்கச்சென்ற போது போலீசாரும் தாக்கப்பட்டனர்.

இந்த சம்பவங்கள் தொடர்பாக ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை சேர்ந்த பத்மேஸ்வரன் (வயது 23) மற்றும் அவருடைய கூட்டாளிகள் கைது செய்யப்பட்டனர்.

பத்மேஸ்வரன் மதுரை சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். அந்த சம்பவத்தில் போலீசாரிடம் இருந்து தப்பிக்க முயன்ற போது அவரது 2 கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டதால் மதுரை மத்திய சிறையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் மேல்சிகிச்சைக்காக பத்மேஸ்வரனை மதுரை அரசு ராஜாஜி ஆஸ்பத்திரிக்கு ஆயுதப்படை போலீசார் நேற்று காலை அழைத்து வந்தனர்.

தப்பி ஓட்டம்

அங்கு டாக்டர்களிடம் காண்பித்து அவரது உடல்நிலை குறித்த விரிவான அறிக்கை பெற போலீசார் முயன்று கொண்டிருந்தனர். அந்த நேரத்தில் கைதி பத்மேஸ்வரன் போலீசாரை ஏமாற்றி அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். அவரை ஆஸ்பத்திரி வளாகம் முழுவதும் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. உடனே போலீசார் இது குறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.

அதன்பேரில் போலீசார் நகர் முழுவதும் உஷார்படுத்தப்பட்டனர். மேலும் பஸ் நிலையம், ரெயில் நிலையம் மற்றும் சோதனைசாவடிகளில் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டு அவரை தேடி வருகிறார்கள். மேலும் தப்பி சென்ற பத்மேஸ்வரன் மீது 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. ஏற்கனவே குண்டர் சட்டத்திலும் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

கைதி தப்பி சென்ற சம்பவம் ஆஸ்பத்திரியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story