பற்களை பிடுங்கிய விவகாரம்: பாதிக்கப்பட்ட இளைஞர்கள் மனித உரிமை ஆணையத்தில் வாக்குமூலம்


பற்களை பிடுங்கிய விவகாரம்: பாதிக்கப்பட்ட இளைஞர்கள் மனித உரிமை ஆணையத்தில் வாக்குமூலம்
x

அம்பை உதவி போலீஸ் சூப்பிரண்டால் பற்கள் பிடுங்கப்பட்டதாக கூறிய இளைஞர்கள் மனித உரிமை ஆணையத்தில் நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தனர்.

சென்னை,

நெல்லை மாவட்டம் அம்பை உதவி போலீஸ் சூப்பிரண்டாக இருந்த ஐ.பி.எஸ் அதிகாரியான பல்வீர்சிங், விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கியதாக சர்ச்சை எழுந்தது. இதுதொடர்பான வீடியோ வைரலானது.

இதைத்தொடர்ந்து பல்வீர்சிங் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இந்த குற்றச்சாட்டு குறித்து நெல்லை கலெக்டரின் உத்தரவின் பேரில் சேரன்மகாதேவி சப்-கலெக்டர் முகமது சபீர் ஆலம் விசாரணை நடத்தி வருகிறார்.

மனித உரிமை ஆணையம் விசாரணை

அதேவேளையில், இந்த விவகாரம் தொடர்பாக மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து (சூமோட்டோ) வழக்காக எடுத்து விசாரித்தது.

பின்னர், இதுதொடர்பாக மனித உரிமை ஆணையத்தின் புலனாய்வு பிரிவு ஐ.ஜி. விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய ஆணையம் உத்தரவிட்டது. அதன்படி, பாதிக்கப்பட்ட இளைஞர்கள் மனித உரிமை ஆணையத்தின் புலனாய்வு பிரிவில் நேரில் ஆஜராகி தங்கள் தரப்பு விளக்கத்தை அளிக்க சம்மன் அனுப்பப்பட்டது.

வாக்குமூலம்

அதன்படி, பாதிக்கப்பட்ட இளைஞர்களான மாரியப்பன், செல்லப்பா, இசக்கிமுத்து, சுபாஷ், வேதநாராயணன் ஆகியோர் தங்களது வக்கீல் மகாராஜனுடன் நேற்று சென்னையில் உள்ள மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் புலனாய்வு பிரிவில் ஆஜராகினர்.

அவர்களிடம் நடந்த சம்பவம் குறித்து போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்வரன் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர், பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் தரப்பு விளக்கத்தை வாக்குமூலமாக அளித்தனர். தங்களிடம் உதவி போலீஸ் சூப்பிரண்டு மட்டுமல்லாமல் காவல்துறையை சேர்ந்த வேறு சிலரும் கடுமையாக நடந்து கொண்டதாகவும், உதவி போலீஸ் சூப்பிரண்டு மீது புகார் அளிக்காமல் இருக்க போலீசார் மிரட்டல் விடுத்ததாகவும் தெரிவித்தனர்.

விரைவில் விசாரணை

இவர்களது வாக்குமூலத்தை ஆணையத்தின் புலனாய்வு பிரிவு போலீசார் பதிவு செய்து கொண்டனர். இவர்கள் கூறி உள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பாக உதவி போலீஸ் சூப்பிரண்டு பல்வீர்சிங் மற்றும் அம்பை போலீசாரிடம் விசாரணை நடத்த புலனாய்வு பிரிவு போலீசார் முடிவு செய்துள்ளனர்.

இதற்காக பல்வீர்சிங் மற்றும் அம்பை போலீசாருக்கு புலனாய்வு பிரிவு போலீசார் விரைவில் சம்மன் அனுப்ப உள்ளனர். இந்த விசாரணை முடிந்ததும் ஆணையத்தில் அறிக்கையை தாக்கல் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story