சென்னை-மதுரை இடையிலான தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் தாம்பரத்தில் நின்று சென்றது


சென்னை-மதுரை இடையிலான தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் தாம்பரத்தில் நின்று சென்றது
x

சென்னை-மதுரை இடையிலான தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் தாம்பரத்தில் நின்று சென்றது. இதனை மத்திய மந்திரி எல்.முருகன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

சென்னை

தாம்பரம்,

சென்னை எழும்பூரில் இருந்து மதுரைக்கு தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. வாரத்தில் வியாழக்கிழமை தவிர்த்து மற்ற 6 நாட்களும் இந்த ரெயில் சென்னை எழும்பூரில் இருந்து காலை 6 மணிக்கு புறப்பட்டு மதியம் 12.15 மணிக்கு மதுரை சென்றடையும்.

மறுமார்க்கமாக மாலை 3 மணிக்கு மதுரையில் இருந்து புறப்படும் ெரயில் இரவு 9.15 மணிக்கு சென்னை எழும்பூரை வந்தடையும். இடையில் திருச்சி மற்றும் திண்டுக்கல் ஆகிய 2 ரெயில் நிலையங்களில் மட்டும் நின்று செல்லும். அதிநவீன சொகுசு வசதிகள் இருப்பதோடு, பயண நேரமும் குறைவு என்பதால் இந்த ெரயிலை பொதுமக்கள் அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர்.

பொதுமக்கள் கோரிக்கை

இந்தநிலையில் தென்மாநில மக்கள் பயன்பெறும் வகையில் தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் தாம்பரத்தில் நின்று செல்ல வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். அதனை ஏற்று மத்திய ெரயில்வே அமைச்சகம் சென்னை-மதுரை இடையேயான தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று முதல் தாம்பரத்தில் நின்று செல்லும் என அறிவித்தது.

அதன்படி நேற்று முதல் தாம்பரம் ரெயில் நிலையத்தில் தேஜஸ் விரைவு ரெயில் நின்று சென்றது. இதற்கான விழா தாம்பரம் ரெயில் நிலையத்தில் நடந்தது.

காலை 6 மணிக்கு எழும்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்ட தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் காலை 6.25 மணிக்கு தாம்பரம் ரெயில் நிலையத்துக்கு வந்து நின்றது. அதில் பயணிகள் ஏறினர். பின்னர் 2 நிமிடத்துக்கு பிறகு 6.27 மணிக்கு ரெயில் புறப்பட்டு சென்றது.

மத்திய மந்திரி

இதனை மத்திய தகவல் ஒளிபரப்பு துறை இணை மந்திரி எல்.முருகன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் தி.மு.க. நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு எம்.பி., தாம்பரம் எம்.எல்.ஏ. எஸ்.ஆர்.ராஜா, தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி, தெற்கு ெரயில்வே சென்னை கோட்ட மேலாளர் கணேஷ், மாநகராட்சி மண்டல தலைவர்கள் டி.காமராஜ், எஸ்.சந்திரன், பா.ஜ.க. மாவட்ட தலைவர் வேதசுப்பிரமணியம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அதன்படி இனிமேல் சென்னை எழும்பூரில் இருந்து தாம்பரம் ெரயில் நிலையத்துக்கு காலை 6.25 மணிக்கு வரும் தேஜஸ் எக்ஸ்பிரஸ் ெரயில் 2 நிமிடம் நின்று காலை 6.27 மணிக்கு மதுரை புறப்பட்டு செல்லும். மதுரையில் இருந்து புறப்பட்டு இரவு 8.38 மணிக்கு தாம்பரம் ெரயில் நிலையம் வரும் ெரயில் 8.40 மணிக்கு எழும்பூருக்கு புறப்பட்டு செல்லும் என தெற்கு ெரயில்வே அறிவித்துள்ளது.


Next Story