பட்டியில் அடைக்கப்பட்டிருந்த 11 ஆடுகள் திருட்டு
பட்டியில் அடைக்கப்பட்டிருந்த 11 ஆடுகள் திருட்டு போனது.
சமயபுரம்:
ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் அருகே உள்ள விளாக்குளத்தூர் பகுதியை சேர்ந்தவர் பூவலிங்கம் (வயது 50). இவருக்கு சொந்தமான சுமார் 200 வெள்ளாடு மற்றும் செம்மறி ஆடுகளை திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே உள்ள மாடக்குடி பகுதியில் பட்டி போட்டுள்ளார். இவருக்கு உதவியாக முதுகுளத்தூர் பகுதியை சேர்ந்த இவரது உறவினர்கள் 4 பேர் உள்ளனர். இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு இரவில் பட்டியில் ஆடுகளை அடைத்துவிட்டு, சாப்பிட்ட பின்னர் அனைவரும் ஆடுகளின் அருகே தூங்கிக் கொண்டிருந்தனர். நேற்று முன்தினம் காலை வழக்கம்போல் எழுந்து பார்த்தபோது பட்டியில் அடைக்கப்பட்டிருந்த ஆடுகளில் சுமார் 11 ஆடுகளை காணவில்லை.
இதனால், அதிர்ச்சி அடைந்த பூவலிங்கம் இது குறித்து சமயபுரம் போலீஸ் நிலையத்தில் நேற்று புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராம்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் அங்கு பொருத்தப்பட்டிருக்கும் கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பின்னர் இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் ஆடுகளை திருடிச்சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.