பேரம்பாக்கம் அருகே தொழிலாளி வீட்டில் 21 பவுன் நகைகள் திருட்டு


பேரம்பாக்கம் அருகே தொழிலாளி வீட்டில் 21 பவுன் நகைகள் திருட்டு
x

பேரம்பாக்கம் அருகே தொழிலாளி வீட்டில் புகுந்த மர்மநபர்கள் 21 பவுன் நகைகளை திருடிச்சென்ற சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர்

மகளின் திருமணத்திற்காக...

திருவள்ளூர் மாவட்டம், பேரம்பாக்கம் அருகே உள்ள பண்ணூர் கிராமத்தைச் சேர்ந்தவர் லூர்துசாமி. கூலித்தொழிலாளி. இவருக்கு அன்னம்மாள் என்ற மனைவியும், ஒரு மகளும் உள்ளனர். இவர் தனது மகளின் திருமணத்திற்காக வளையல், மோதிரம், ஆரம், சங்கிலி என 21 பவுன் தங்க நகைகளை சிறுக சிறுக வீட்டில் சேமித்து வைத்திருந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் வழக்கம் போல லூர்துசாமி, அன்னம்மாள் ஆகியோர் வேலைக்கு சென்றனர். இவரது மகள் கல்லூரிக்கு சென்று விட்டார்.

நகை திருட்டு

பின்னர், மாலையில் வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்தபோது, வீட்டின் பீரோவில் வைத்திருந்த 21 பவுன் தங்க நகைகள் திருட்டு போனது தெரிய வந்தது. குடும்பத்தினர் அனைவரும் வெளியே சென்று இருந்ததை நோட்டமிட்டு மர்மநபர்கள் வீட்டிற்குள் புகுந்து நகைகளை கொள்ளையடித்து சென்றதை அறிந்து அதிர்ச்சியடைந்தனர்.

இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் கொள்ளை சம்பவம் குறித்து மப்பேடு போலீசில் புகார் கொடுத்தனர். இது சம்பந்தமாக சப்-இன்ஸ்பெக்டர் சக்திவேல் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து கூலித்தொழிலாளி வீட்டில் தங்க நகைகளை திருடிய மர்ம நபர்கள் யார்? என தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story