ஸ்கூட்டரில் வைத்திருந்த ரூ.2 லட்சம் திருட்டு


ஸ்கூட்டரில் வைத்திருந்த ரூ.2 லட்சம் திருட்டு
x

நாமக்கல்லில் குறைந்த விலையில் தக்காளி வாங்க சென்ற பெண்ணிடம், பட்டப்பகலில் ஸ்கூட்டரில் வைத்திருந்த ரூ.2 லட்சத்தை மர்மநபர்கள் திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நாமக்கல்

ரூ.2 லட்சம் திருட்டு

நாமக்கல் சின்னமுதலைப்பட்டியை சேர்ந்தவர் பாக்கியலட்சுமி (வயது42). இவரது மகன் நிவாஷ் வெளிநாட்டில் எம்.பி.ஏ. படித்து கொண்டே பகுதிநேரமாக வேலை செய்து வருகிறார். அதில் கிடைக்கும் வருவாயை தனது தாயாருக்கு அனுப்பி வருகிறார்.

அந்த வகையில் நிவாஷ் அனுப்பிய ரூ.2 லட்சத்தை எடுக்க, நேற்று பாக்கியலட்சுமி நாமக்கல் - சேலம் சாலை முதலைப்பட்டியில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கிக்கு சென்றார். அங்கு பணத்தை பெற்றுக்கொண்ட பாக்கியலட்சுமி, ஒரு கை பையில் வைத்து சாலையோரம் நிறுத்தி இருந்த தனது ஸ்கூட்டரில் வைத்து உள்ளார்.

பின்னர் அருகில் குறைந்த விலைக்கு ஆட்டோவில் விற்பனை செய்து கொண்டு இருந்த தக்காளியை வாங்க சென்று உள்ளார். இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் ஸ்கூட்டரில் இருந்த ரூ.2 லட்சத்தை திருடி சென்று விட்டனர். தக்காளியை ஸ்கூட்டரில் வைக்க சென்றபோது அங்கு வைக்கப்பட்டு இருந்த பணம் திருட்டு போய் இருப்பது தெரியவந்தது.

பரபரப்பு

இது குறித்து பாக்கியலட்சுமி நாமக்கல் நல்லிபாளையம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அவ்வாறு ஆய்வு செய்தபோது பாக்கியலட்சுமியை 3 மோட்டார் சைக்கிள்களில் மர்மநபர்கள் பின் தொடர்ந்து வந்து இருப்பது தெரியவந்து உள்ளது.

மேலும் பாக்கியலட்சுமியுடன் மர்மநபர்கள் சிலர் தக்காளி வாங்குவது போல நடித்து ஸ்கூட்டரை மறைத்து கொண்டு நின்று இருப்பதும் தெரியவந்து உள்ளது. நாமக்கல்லில் பட்டப்பகலில் நடந்த இச்சம்பவம் நேற்று அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story