பெண்ணை கத்தியால் குத்திய கள்ளக்காதலன்
தன்னுடன் சேர்ந்து வாழ வர மறுத்த பெண்ணை கள்ளக்காதலன் கத்தியால் குத்தினார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெ.நா.பாளையம்
தன்னுடன் சேர்ந்து வாழ வர மறுத்த பெண்ணை கள்ளக்காதலன் கத்தியால் குத்தினார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கள்ளக்காதல்
கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையத்தை அடுத்த சாமிசெட்டிபாளையம் பகுதியை சேர்ந்த 31 வயது பெண்ணுக்கு, திருமணமாகி கணவர் மற்றும் பெண் குழந்தை உள்ளனர். அவர், துடியலூரில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் உதவியாளராக வேலை செய்து வந்தார்.
அப்போது அவருக்கும், அங்கு வேலை செய்து வந்த சேலம் மாவட்டம் காடையாம்பட்டியை சேர்ந்த ஒரு வாலிபருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இதை அறிந்ததும் அந்த பெண்ணை, அவரது கணவர் கண்டித்தார். எனினும் அவர், கள்ளக்காதலை கைவிடவில்லை என தெரிகிறது.
கத்திக்குத்து
இதையடுத்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கணவரை பிரிந்த அந்த பெண், தனது கள்ளக்காதலனுடன் சேலத்துக்கு சென்றார். அங்கு அவர்கள் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்தனர். அப்போது அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் அவரை விட்டு பிரிந்து கோவைக்கு வந்த அந்த பெண், மீண்டும் தனது கணவருடன் வாழ்ந்து வந்தார்.
இதற்கிடையில் அங்கு வந்த கள்ளக்காதலன், அந்த பெண்ணை தன்னுடன் சேர்ந்து வாழ வருமாறு அழைத்தார். அதற்கு அவர் மறுப்பு தெரிவிக்கவே, தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து குத்தினார். இதில் அந்த பெண் பலத்த காயம் அடைந்தார்.
தப்பி ஓட்டம்
உடனே அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். இதனால் அங்கிருந்து கள்ளக்காதலன் தப்பி ஓடினார். பின்னர் அவர்கள் அந்த பெண்ணை மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்த புகாரின்பேரில் பெரியநாயக்கன்பாளையம் போலீசார், அந்த பெண்ணின் கள்ளக்காதலனான லோகி தாஸ்(33) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.