பல இடங்களில் திருடியவர் கைது
சேத்துப்பட்டு பகுதியில் பல இடங்களில் திருடியவர் 2-வது மனைவியை சந்திக்க வந்தபோது போலீசார் மடக்கி பிடித்தனர்.
சேத்துப்பட்டு,
சேத்துப்பட்டு பகுதியில் பல இடங்களில் திருடியவர் 2-வது மனைவியை சந்திக்க வந்தபோது போலீசார் மடக்கி பிடித்தனர்.
வீடு புகுந்து திருட்டு
சேத்துப்பட்டு அருகே கன்னிகாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 42). இவர் நரசிங்கபுரம் கிராமத்தில் நடந்த திருவிழாவுக்கு செல்வதற்கு வீட்டை பூட்டிவிட்டு சென்றார்.
பின்னர் வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டு பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்து 1 பவுன் நகைகள், ரூ.10 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது.
இதுகுறித்து அவர் சேத்துப்பட்டு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
போலீசார் மடக்கி பிடித்தனர்
இந்த நிலையில் தேவிகாபுரம் நாவிதர் தெருவை சேர்ந்த சுதாகர் (வயது 39) என்பவர் தனது 2-வது மனைவி கவிதாவை சந்திக்க வந்தார்.
சேத்துப்பட்டு போலீசார் ரோந்து பணியில் இருந்தபோது போலீசாரை பார்த்ததும் சுதாகர் பதுங்க முயன்றார். உடனடியாக போலீசார் அவரை மடக்கி பிடித்து விசாரித்தனர்.
அப்போது அவரது கையில் கோடரி இருந்தது. மேலும் அவருடைய பாக்கெட்டில் ஒரு பவுன் நகைகள் இருந்தன. இதையடுத்து அவரிடம் தீவிர விசாரணை நடத்தியபோது, வெங்கடேசன் வீட்டில் திருடிய நகை என்று ஒப்பு கொண்டார்.
மேலும் 2019-ம் ஆண்டு தேவிகாபுரத்தைச் சேர்ந்த மொய்தீன் (50) என்பவர் வீட்டில் அவரது மகள் திருமணத்துக்காக வைத்திருந்த 15 பவுன் நகைகளை சுதாகர் திருடியது தெரிய வந்தது.
8 பவுன் நகைகள் மீட்பு
அதில் 7 பவுன் நகைகளை சென்னை பூந்தமல்லி பகுதியில் வசிக்கும் தன்னுடைய சகோதரி சாரதாவிடம் கொடுத்துள்ளதாக சுதாகர் தெரிவித்தார்.
பின்னர் சாரதாவிடம் இருந்து 7 பவுன் நகைகள் மற்றும் அவரிடம் இருந்த 1 பவுன் நகைகள் என 8 பவுன் நகைகள் மீட்கப்பட்டது. மீதி உள்ள நகைகளை கேட்டபோது அதனை விற்று ஜாலியாக இருந்து வந்தேன் என்று அவர் கூறினார்.
இதையடுத்து சேத்துப்பட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் தமிழரசி சப்-இன்ஸ்பெக்டர் வரதராஜ் ஆகியோர் சுதாகரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.