திருடிச்சென்ற அம்மன் வெள்ளி கவசத்தை திருப்பிக்கொடுத்த திருடன்
பட்டுக்கோட்டை ஆகாச மாரியம்மன் கோவிலில் திருடிச்சென்ற அம்மன் வெள்ளி கவசத்தை திருடியவனே திருப்பிக்கொடுத்த அதிசயம் நடந்துள்ளது.
பட்டுக்கோட்டை:
பட்டுக்கோட்டை ஆகாச மாரியம்மன் கோவிலில் திருடிச்சென்ற அம்மன் வெள்ளி கவசத்தை திருடியவனே திருப்பிக்கொடுத்த அதிசயம் நடந்துள்ளது.
இந்த சுவாரசியமான சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
அம்மனின் முக கவசம் திருட்டு
தஞ்ைச மாவட்டம் பட்டுக்கோட்டை சவுக்கண்டி தெருவில் ஆகாச மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதுபோல இந்த ஆண்டும் கடந்த 7-ந் தேதி திருவிழா நடந்தது.
திருவிழாவின்போது அம்மனுக்கு கரகம் வைத்து அரை கிலோ வெள்ளியினால் ஆன முகக்கவசம் அணிவித்து அலங்காரம் செய்யப்பட்டது. இந்த நிலையில் திருவிழா நடந்த மறுநாள்(8-ந் தேதி) காலை அம்மனுக்கு வைத்திருந்த வெள்ளி முக கவசத்தை யாரோ திருடிச் சென்று விட்டனர்.
திருடியவனே திருப்பி கொடுத்த அதிசயம்
இந்த திருட்டு சம்பவம் குறித்து கோவில் நிர்வாகி பாலசுப்பிரமணியம் பட்டுக்கோட்டை நகர போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று அதிகாலை கோவில் நிர்வாகி பாலசுப்பிரமணியனுக்கு போனில் ஒரு அழைப்பு வந்தது. அந்த அழைப்பை எடுத்து பாலசுப்பிரமணியன் பேசியபோது மறுமுனையில் பேசியவர், திருட்டுப்போன அம்மன் வெள்ளி முகக்கவசம் கோவில் பந்தலுக்குப் பின்புறம் வைத்துள்ளேன். எடுத்துக் கொள்ளுங்கள் என்று கூறி விட்டு போனின் அழைப்பை துண்டித்து விட்டார்.
இதனையடுத்து அவர் அந்த இடத்திற்கு சென்று பார்த்தபோது ஒரு மஞ்சள் துணியில் சுற்றி அம்மனின் முகக் கவசம் வைக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது. திருடுபோன அம்மனின் முககவசம் திரும்ப கிடைத்ததை கண்டு கோவில் நிர்வாகி மற்றும் அந்த பகுதி மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.
போலீசார் விசாரணை
நடந்த சம்பவம் குறித்து கோவில் நிர்வாகி பாலசுப்பிரமணியன், பட்டுக்கோட்டை நகர போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவலின் பேரில் கோவிலுக்கு வந்த போலீசார், கோவில் நிர்வாகிக்கு வந்த போன் அழைப்பு குறித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த அழைப்பு திருப்பூரில் இருந்து வந்தது தெரிய வந்தது.
இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.