சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பாதிரியார் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்ய முடியாது; மதுரை ஐகோர்ட்டு மறுப்பு


சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பாதிரியார் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்ய முடியாது; மதுரை ஐகோர்ட்டு மறுப்பு
x

மனநலம் குன்றிய சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் பாதிரியார் மீதான குண்டர் சட்ட உத்தரவை ரத்து செய்ய முடியாது என மதுரை ஐகோர்ட்டு மறுத்துவிட்டது. பாதுகாக்க வேண்டியவரே கொள்ளையனாக மாறிவிட்டார் எனவும் கருத்து தெரிவித்தது.

மதுரை,

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதியில் உள்ள கிறிஸ்தவ ஆலயத்தில் பாதிரியாராக இருந்தவர் ஜோசப்ராஜா. இவர் கடந்த ஆண்டு மே மாதம் அதே பகுதியைச் சேர்ந்த மனநலம் குன்றிய 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து ராஜபாளையம் போலீசார் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குபதிவு செய்து, அவரை கைது செய்தனர்.

பின்னர் அவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. இந்தநிலையில் அவர் மீதான குற்றச்சாட்டுகளை ரத்து செய்யக்கோரி அவருடைய மனைவி சூசம்மா பேபி, மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

அந்த வழக்கு நீதிபதிகள் சுரேஷ்குமார், ராமகிருஷ்ணன் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது கூடுதல் அரசு வக்கீல் திருவடிகுமார் ஆஜராகி, மனுதாரரின் கணவர் பணியாற்றிய ஆலய வளாகத்திலேயே சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்து உள்ளார். இதை கேள்விப்பட்ட அப்பகுதி மக்கள் பீதியில் உள்ளனர். சம்பவத்தின் தீவிரத்தன்மையை கருத்தில் கொண்டு, ஜோசப்ராஜா மீது குண்டர் தடுப்புச்சட்டத்தின்கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த வழக்கில் விதிமுறைகளை பின்பற்றி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து உள்ளனர். எனவே மனுதாரரின் கோரிக்கை ஏற்புடையதல்ல. இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வாதாடினார்.

மனு தள்ளுபடி

விசாரணை முடிவில், சாதாரண மனிதனைக்காட்டிலும் உயர்ந்த இடத்தில் வைக்கப்பட்ட ஒருவர் இதுபோன்ற சம்பவத்தில் ஈடுபட்டு இருப்பது நீதித்துறையை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது. பாதுகாக்க வேண்டியவரே கொள்ளையனாக மாறியுள்ளார் எனவே அவர் மீதான வழக்கின் தீவிரத்தன்மையை கருத்தில் கொண்டு அவர் மீதான குண்டர் சட்ட நடவடிக்கையை ரத்துசெய்ய இயலாது. இந்த மனுவை தள்ளுபடி செய்கிறோம் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


Next Story