கொலை, வழிப்பறியில் ஈடுபட்ட பெண் உள்பட 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
கொலை, வழிப்பறியில் ஈடுபட்ட பெண் உள்பட 3 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது.
சேலம்,
வழிப்பறி
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள குருவரெட்டியூரை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவருடைய மகன் விவேக் (வயது 21). இவர் சேலம் செவ்வாய்பேட்டை, பள்ளப்பட்டி, அங்கம்மாள் காலனி உள்ளிட்ட இடங்களில் பலரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம், நகைகள் போன்றவற்றை வழிப்பறி செய்துள்ளார். இது குறித்த புகார்களின் பேரில் பள்ளப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விவேக்கை கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
அதே போன்று சேலம் பள்ளிப்பட்டி சாமியார் கரடு பகுதியை சேர்ந்த மதியழகன் மகன் பசுபதி (24). இவர் வலசையூரை சேர்ந்த சீனிவாசன் என்பவரிடம் கத்தியை காண்பித்து ரூ.50 ஆயிரம் பறித்துக்கொண்டார். இதே போன்று பல்வேறு வழிப்பறியில் ஈடுபட்டார். இவரை வீராணம் போலீசார் கைது செய்தனர்.
குண்டர் சட்டத்தில் கைது
சேலம் அழகாபுரத்தை சேர்ந்தவர் விஜயலட்சுமி (34). இவர் தனது கணவரை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். இது குறித்த புகாரின் பேரில் அழகாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். இந்த நிலையில் கணவரை கொலை செய்த வழக்கில் இவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய அழகாபுரம் போலீசார் பரிந்துரை செய்தனர். இதே போன்று தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட விவேக், பசுபதி ஆகிய 2 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய போலீசார் பரிந்துரை செய்தனர்.
இதைத்தொடர்ந்து 3 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய போலீஸ் கமிஷனர் நஜ்முல்ஹோடா உத்தரவிட்டார்.
இதையடுத்து சேலம் சிறையில் உள்ள விவேக், பசுபதி மற்றும் கோவை பெண்கள் சிறையில் உள்ள விஜயலட்சுமி ஆகிய 3 பேரிடம் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கான நகலை போலீசார் வழங்கினர்.