திற்பரப்பு அருவியில் மிதமாக கொட்டும் தண்ணீர்
திற்பரப்பு அருவியில் மிதமாக கொட்டும் தண்ணீரில் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.
திருவட்டார்,
திற்பரப்பு அருவியில் மிதமாக கொட்டும் தண்ணீரில் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.
திற்பரப்பு அருவி
குமரி மாவட்டத்தில் தற்போது கடுமையாக வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதில் இருந்து தப்பிக்க நீர்நிலைகளுக்கு மக்கள் அதிக அளவு சென்று வருகின்றனர். அதன்படி மக்கள் அதிக அளவில் வருகை தரும் சுற்றுலா தலங்களில் ஒன்றான திற்பரப்பு அருவிக்கு நேற்று காலை முதலே ஏராளமான சுற்றுலா பயணிகள் பல்வேறு வாகனங்களில் வருகை தந்தனர். அருவியில் ஆசை தீர குளித்து மகிழ்ந்தனர். மேலும் அருவியின் அருகில் உள்ள சிறுவர் பூங்கா, அலங்கார நீரூற்று, பச்சைபசேல் புல்வெளி தோட்டம் ஆகியவற்றை பார்த்து ரசித்தனர். அருவியில் குளித்தும் நீச்சல் குளத்தில் நீந்தியும் பொழுதை கழித்தனர். கோதையாற்றியில் தற்போது தண்ணீர் வரத்து மிதமாக பாய்வதால் கோதையாற்றின் குறுக்கே உள்ள அருவியின் அனைத்து பகுதிகளிலும் தண்ணீர் மிதமாகக் கொட்டுகிறது.
போக்குவரத்து நெரிசல்
மேலும் சுற்றுலா பயணிகள் தடுப்பணையில் படகு சவாரி செய்தும் மகிழ்ந்தனர். நேற்று அதிக வாகனங்கள் திற்பரப்புக்கு வந்ததால் அடிக்கடி இப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
மாத்தூர் தொட்டிப்பாலம், பேச்சிப்பாறை அணைக்கட்டு ஆகிய சுற்றுலா தலங்களிலும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தந்து உற்சாகமாக பொழுதை போக்கினர். மாத்தூர் தொட்டிப்பாலத்தில் குறைந்த விலையில் கிடைக்கும் அன்னாசி, நுங்கு ஆகியவற்றை விருப்பமுடன் வாங்கி சாப்பிட்டனர்.