சுற்றுலா வந்த தொழிலாளி ஆற்றில் மூழ்கி பலி


சுற்றுலா வந்த தொழிலாளி ஆற்றில் மூழ்கி பலி
x

கொல்லிமலை அருகே சுற்றுலா வந்த இடத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த தொழிலாளி ஆற்றில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.

நாமக்கல்

சேந்தமங்கலம்

கொல்லிமலைக்கு சுற்றுலா

புதுக்கோட்டை மாவட்டம் தின்னுப்பட்டி கிராமத்தை சேர்ந்த 18 பேர் ஒரு சுற்றுலா வேனில் நேற்றுமுன்தினம் கொல்லிமலைக்கு சுற்றுலா வந்தனர். அவர்கள் பல்வேறு இடங்களை சுற்றி பார்த்தனர். இதையடுத்து மாலை அங்குள்ள குண்டூர்நாடு நத்துகுளிப்பட்டி அருகே வேன் வந்து கொண்டிருந்தது. அப்போது வேனில் வந்த ஏழுமலை (வயது 38) என்பவர் அங்குள்ள ஆற்றில் குளிப்பதற்காக இறங்கினார். மற்ற அனைவரும் அங்குள்ள மாசி பெரியசாமி கோவிலுக்கு சென்று விட்டனர்.

இந்தநிலையில் ஆற்றில் குளிக்க சென்ற ஏழுமலை திடீரென்று அங்குள்ள பாறை இடுக்குகளில் சிக்கி வெளியே வர முடியாமல் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார். இதை அறிந்த சுற்றுலா பயணிகள் மற்றும் அங்குள்ள மலைவாழ் மக்கள் கொல்லிமலை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

உடல் மீட்பு

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு நிலைய வீரர்கள் ஏழுமலையை பிணமாக மீட்டனர். அதைத்தொடர்ந்து அவரது உடலை நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து கொல்லிமலை வாழவந்தி நாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்்தினர். ஆற்றில் மூழ்கி பலியான தொழிலாளி ஏழுமலைக்கு, பச்சையம்மாள் (35) என்ற மனைவியும், 2 மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர்.

கொல்லிமலை அருகே சுற்றுலா வந்த தொழிலாளி ஆற்றில் மூழ்கி இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story