தனியார் பஸ் மோதியதில் டிராக்டர் தலைகுப்புற கவிழ்ந்தது
ஒரத்தநாடு அருகே தனியார் பஸ் மோதியதில் டிராக்டர் தலைகுப்புற கவிழ்ந்தது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஒரத்தநாடு:
ஒரத்தநாடு அருகே தனியார் பஸ் மோதியதில் டிராக்டர் தலைகுப்புற கவிழ்ந்தது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தலைகுப்புற கவிழ்ந்தது
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள மேலஉளூர் கிராமத்தை சேர்ந்தவர் அசோக்குமார் (வயது47). இவர் நேற்று மதியம் பட்டுக்கோட்டை- தஞ்சை பிரதான சாலையில் டிராக்டரை ஓட்டிச் சென்றார். அப்போது இதே சாலையில் பட்டுக்கோட்டையில் இருந்து தஞ்சைக்கு சென்ற ஒரு தனியார் பஸ் டிராக்டரை முந்தி செல்ல முயற்சித்த போது, டிராக்டர் மீது எதிர்பாராதவிதமாக மோதியது.
இதில் டிராக்டர் தலைகுப்புற கவிழ்ந்தது. அப்போது அதே சாலையில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் மீதும் டிராக்டர் மோதியது. இதில் அந்த காரும் சேதம் அடைந்தது.
டிரைவர் காயம்
அதேபோல் டிராக்டர் மீது மோதிய தனியார் பஸ்சின் படிக்கட்டுகள் உள்ளிட்ட சில பகுதிகளும், டிராக்டரும் சேதம் அடைந்தன. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்டு தலையில் காயமடைந்த டிராக்டர் டிரைவர் அசோக்குமார் தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
மேலும் தனியார் பஸ்சில் சென்ற பயணிகள் சிலருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதுபற்றிய தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஒரத்தநாடு போலீசார் விபத்தில் சேதம் அடைந்த தனியார் பஸ், டிராக்டர், கார் ஆகியவற்றை கைப்பற்றி ஒரத்தநாடு போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.