சாலையில் கரும்புகளை கொட்டியபடி சென்ற டிராக்டர்


சாலையில் கரும்புகளை கொட்டியபடி சென்ற டிராக்டர்
x
தினத்தந்தி 18 Aug 2023 6:45 PM GMT (Updated: 18 Aug 2023 6:47 PM GMT)

நெல்லிக்குப்பத்தில் சாலையில் கரும்புகளை கொட்டியபடி சென்ற டிராக்டர் டிரைவரிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

கடலூர்

நெல்லிக்குப்பம்,

நெல்லிக்குப்பத்தில் உள்ள தனியார் சர்க்கரை ஆலையில் கரும்பு அரவை பணி நடைபெற்று வருகிறது. இதற்காக நெல்லிக்குப்பம், மேல்பட்டாம்பக்கம், குறிஞ்சிப்பாடி, கடலூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விளைநிலங்களில் இருந்து அறுவடை செய்யப்பட்ட கரும்புகள் மாட்டுவண்டி, டிராக்டர்கள் மற்றும் லாரிகளில் ஏற்றப்பட்டு சர்க்கரை ஆலைக்கு கொண்டு வரப்படுகின்றன.

அந்த வகையில் நேற்று மதியம் சர்க்கரை ஆலைக்கு கரும்பு ஏற்றிக் கொண்டு டிராக்டர் ஒன்று வந்து கொண்டிருந்தது. அந்த டிராக்டர் நெல்லிக்குப்பம்- நத்தம் சாலையில் சென்றபோது, அதில் இருந்த கரும்புகள் சாலையில் கொட்டியபடியே சென்றது. இதனால் சாலை முழுவதும் கரும்புகள் சிதறி கிடந்தன. அப்போது டிராக்டரின் பின்னால் இருசக்கர வாகனங்களில் வந்தவர்களின் அருகில் கரும்புகள் விழுந்தன. இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள், டிராக்டரை மறித்து டிரைவருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது டிரைவர் எவ்வித பதிலும் அளிக்காமல் அங்கிருந்து சென்று விட்டார். இருப்பினும் விதிமுறையை மீறி அளவுக்கு அதிகமாகவும், முறையாக கட்டாமலும் கரும்புகளை ஏற்றிச் செல்லும் டிரைவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story