கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்கத்தினர் சாலை மறியல்


கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்கத்தினர் சாலை மறியல்
x

கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிற்சங்கத்தினர் 148 பேரை போலீசார் கைது செய்தனர்.

கரூர்

சாலை மறியல்

கரூர் மாவட்ட ஏ.ஐ.டி.யு.சி. சார்பில் ஜவஹர் பஜாரில் உள்ள தலைமை தபால் அலுவலகம் முன்பு சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் குப்புசாமி தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் துரைசாமி கலந்துகொண்டு கோரிக்கைகளை விளக்கி பேசினார். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் 240 நாட்கள் பணி புரிந்தவர்களுக்கு பணி நிரந்தரம் வழங்க வேண்டும்.

எந்த ஒரு தொழிலில் பணிபுரிந்தாலும் குறைந்தபட்சமாக மாதம் ரூ.21 ஆயிரம் சம்பளம் வழங்க வேண்டும். இ.பி.எஸ்.-95 மற்றும் நலவாரியங்களில் மாதம் ரூ.6,000 குறையாத ஓய்வூதியம் வழங்க வேண்டும். நலவாரிய பதிவுகளை எளிமைப்படுத்தி தாமதம் இல்லாமல் நிதி பலன்களை உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.

148 பேர் கைது

இந்த போராட்டத்தில் சி.பி.ஐ. மாவட்ட செயலாளர் நாட்ராயன், எ.ஐ.டி.யு.சி. மாவட்ட செயலாளர் ஜி.பி.எஸ்.வடிவேலன், மாவட்ட துணைச் செயலாளர் கலாராணி உள்பட பலர் கலந்து கொண்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த கரூர் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் விதுன்குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதில் உடன்பாடு ஏற்படாததையடுத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 102 பெண்கள் உள்பட 148 பேரை கைது செய்து ஒரு தனியார் மினி பஸ்சில் ஏற்றி, கரூரில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் அவர்கள் அனைவரையும் மாலையில் விடுவித்தனர். இந்த சாலை மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story