பாரம்பரியம் மாறாமல் தயாராகும் கொலு பொம்மைகள்


பாரம்பரியம் மாறாமல் தயாராகும் கொலு பொம்மைகள்
x
தினத்தந்தி 20 Oct 2023 7:30 PM GMT (Updated: 20 Oct 2023 7:30 PM GMT)

மயிலாடுதுறையில் பாரம்பரியம் மாறாமல் கொலு பொம்மைகள் தயாராகி வருகின்றன. இதனால் வெளிநாடுகளில் இருந்தும் வர்த்தக வாய்ப்புகள் உருவாகி வருகின்றன.

மயிலாடுதுறை

மயிலாடுதுறையில் பாரம்பரியம் மாறாமல் கொலு பொம்மைகள் தயாராகி வருகின்றன. இதனால் வெளிநாடுகளில் இருந்தும் வர்த்தக வாய்ப்புகள் உருவாகி வருகின்றன.

நவராத்திரி பண்டிகை

இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்று நவராத்திரி பண்டிகை. 9 நாட்கள் கோலாகலமாக உலகம் முழுவதும் இந்துக்களால் கொண்டாடப்படும் இந்த பண்டிகையில் முக்கிய இடம் பிடிப்பது கொலு பொம்மைகள். நவராத்திரி பண்டிகையின்போது கோவில்கள் மற்றும் வீடுகளில் பொம்மைகளை அழகுற வரிசையாக அடுக்கி கொலு அமைப்பது வழக்கம். முன்பெல்லாம் இந்த கொலுவில் சாமி சிலைகளும், புராண கதைகளில் வரும் கதாபாத்திரங்களின் உருவ பொம்மைகளும் மட்டுமே இடம் பெறும். இந்த கொலு முன்பாக தினசரி வழிபாடுகள் நடக்கும்.

கார்ட்டூன் கதாபாத்திரங்கள்

பாரம்பரிய பண்டிகைகள், இல்ல விழாக்களை குறிக்கும் பொம்மைகளும் கொலுவில் இடம் பெற்று வந்தன. ஆனால் தற்போது சிறுவர், சிறுமிகளை கவரும் வண்ணம் மோட்டுலு பட்லு, சோட்டா பீம் போன்ற கார்ட்டூன் கதாப்பாத்திரங்களின் உருவ பொம்மைகளும் கொலுவில் இடம் பிடித்து வருகின்றன. சவுத் ஆப்பிரிக்கன் பொம்மைகள், மாடன் ஆர்ட் பொம்மைகள், பழ வகைகள், விலங்குகளின் பொம்மைகள், ஏவுகணை பொம்மைகள், தேச தலைவர்களின் உருவ பொம்மைகளையும் கொலுவில் வைக்கின்றனர்.

பாரம்பரியம் மாறாமல்...

இந்த ஆண்டுக்கான நவராத்திரி விழா கடந்த 15-ந் தேதி தொடங்கியது. வருகிற 24-ந் தேதி வரை விழா கொண்டாடப்பட உள்ளது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆயுத பூஜை வருகிற 23-ந் தேதி (திங்கட்கிழமை) நடக்கிறது. நவராத்திரி விழாவுக்கான கொலு பொம்மைகள் பல்வேறு இடங்களில் தயார் செய்யப்பட்டு வந்தாலும், ஒரு சிலரே பாரம்பரியமான முறைப்படி பொம்மைகளை தயாரிக்கிறார்கள். மயிலாடுதுறையில் ஆனந்தன் என்பவர் பாரம்பரிய முறைப்படி பொம்மைகளை தயாரித்து வருகிறார். இதை குடிசைத் தொழிலாக செய்து வரும் இவர் கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கு பொம்மைகளை விற்பனைக்கு அனுப்பி வருகிறார். இவருக்கு சிங்கப்பூர், மலேசியா அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் பொம்மைகள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதன் மூலம் வர்த்தக வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.

பழங்கால அச்சு வார்ப்புகள்

கடந்த 120 ஆண்டுகளுக்கு முன்பு மூதாதையர்கள் உருவாக்கிய பழங்கால கொலு பொம்மை அச்சு வார்ப்புகள் இவரிடம் மட்டும்தான் தற்போது உள்ளன. இதன் மூலமாக அந்த கால பொம்மைகளின் அழகு, கலைநயம் போன்றவற்றை தற்போதும் வடிவமைக்க முடிவதால், இவருடைய கொலு பொம்மைகளின் அழகு மென்மேலும் மெருகேறி கொண்டிருக்கிறது.

இவர் கொலு பொம்மைகளின் உற்பத்தி முறை தொடர்பாக உற்பத்திகளையும் வடிவமைப்புகள் தொடர்பான வீடியோவை ஆனந்தன் தனது இன்ஸ்டாகிராம், யூடியூப் சேனல் பக்கத்தில் பதிவிட்டார். அதனைப் பார்த்த வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் ஆன்லைன் மூலமாகவே ஆர்டர் செய்து பொம்மைகளை வாங்கி வருகிறார்கள்.

அடுத்த தலைமுறை

இதுகுறித்து ஆனந்தன் கூறுகையில், 'மயிலாடுதுறை, சீர்காழி ஆகிய இடங்களில் பாரம்பரியமான பொம்மை வடிவமைப்பு கலையை இரண்டே நபர்கள் மட்டும்தான் செய்து வருகிறார்கள். இந்த கொலு பொம்மை தயாரிப்புக்கு வர்ணம் பூசம் கலைஞர்கள், பாவனைகள் செய்யும் கலைஞர்கள் தற்போது என்னிடம் 2 பேர் மட்டும் தான் வேலைக்கு உள்ளனர். இக்கலையை அடுத்த தலைமுறைக்கு எப்படி கொண்டு செல்ல போகிறோமோ? என்ற கவலை எனக்கு உள்ளது. ஆகையால் இந்த கலையை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் வகையில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்க மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும்' என்றார்.


Next Story