ரெயில் முன்பு பாய்ந்து பா.ம.க. பிரமுகர் தற்கொலை
திருநாகேஸ்வரம் அருகே டாஸ்மாக் கடையில் ஏற்பட்ட தகராறில் தாக்கப்பட்டதால் ரெயில் முன்பு பாய்ந்து பா.ம.க. பிரமுகர் தற்கொலை செய்து கொண்டார்.
திருவிடைமருதூர்:
பா.ம.க. பிரமுகர்
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரம் சன்னாபுரம் குடியான தெருவை சேர்ந்தவர் தங்கமணி. இவருடைய மகன் மணிகண்டன் (வயது35).
திருநாகேஸ்வரம் நகர பா.ம.க. இளைஞரணி செயலாளராக இருந்து வந்த இவர், லாரி, டிராக்டர் ஆகியவற்றை சொந்தமாக வைத்து வாடகைக்கு ஓட்டி வந்தார்.
டாஸ்மாக் கடையில் தகராறு
இந்த நிலையில் நேற்று மாலை திருவிடைமருதூரில் உள்ள ஒரு டாஸ்மாக் கடைக்கு மணிகண்டன் சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த சிலருக்கும், இவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு மணிகண்டனை தாக்கியதாக கூறப்படுகிறது.
இதனால் மன உளைச்சல் அடைந்து அவர் அங்கிருந்து வீட்டுக்கு புறப்பட்டுள்ளார். டாஸ்மாக் கடையில் நடந்த தகராறு குறித்து அவர் தனது உறவினர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளிடம் செல்போன் மூலம் தெரிவித்துள்ளார்.
ரெயிலில் பாய்ந்து தற்கொலை
இதை தொடர்ந்து வீட்டுக்கு செல்லும் வழியில் திருவிடைமருதூர் ெரயில் நிலையம் அருகே வந்த போது தஞ்சையில் இருந்து மயிலாடுதுறையை நோக்கி சென்ற பயணிகள் ரெயில் முன்பு மணிகண்டன் பாய்ந்தார். இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த கும்பகோணம் ெரயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று மணிகண்டன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசில் புகார்
மேலும் தகவல் அறிந்த தஞ்சை மாவட்ட பா.ம.க. செயலாளர் ம.க. ஸ்டாலின் மற்றும் நிர்வாகிகள் மணிகண்டன் வீட்டிற்கு சென்று அவரது குடும்பத்தினரிடம் சம்பவம் குறித்து விசாரித்தனர்.
மணிகண்டனின் தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திருவிடைமருதூர் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சோகம்
டாஸ்மாக் கடையில் சிலருடன் ஏற்பட்ட தகராறில் தன்னை தாக்கியதால் மன உளைச்சல் ஏற்பட்டு பா.ம.க. பிரமுகர் ரெயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உறவினர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.