மரம் வேரோடு சாய்ந்து ரேஷன் கடை மீது விழுந்தது


மரம் வேரோடு சாய்ந்து ரேஷன் கடை மீது விழுந்தது
x

மரம் வேரோடு சாய்ந்து ரேஷன் கடை மீது விழுந்தது

தஞ்சாவூர்

தஞ்சை மாவட்டத்தில் பெய்த மழையால் மரம் வேரோடு சாய்ந்து ரேஷன் கடை கட்டிடம் மீது விழுந்தது. இதில் அந்த கட்டிடத்தின் மேற்கூரை சேதம் அடைந்தது.

பரவலாக மழை

தஞ்சை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. அதன்படி நேற்று முன்தினமும் மாலை 6 மணிமுதல் மழை பெய்தது. சிறிது நேரம் பலத்த மழை பெய்த நிலையில் பின்னர் லேசான தூறலுடன் தொடர்ந்து மழை பெய்துகொண்டே இருந்தது. தஞ்சை மாவட்டத்தில் வல்லம், குருங்குளம், ஈச்சன்விடுதி, திருவிடைமருதூர், கும்பகோணம், திருவையாறு உள்ளிட்ட பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது.

நேற்று காலை முதல் மழை இன்றி வெயில் காணப்பட்டது. இந்த மழையினால் தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் சாய்ந்தன. பல இடங்களில் நேரடி நெல் விதைப்பு செய்யப்பட்ட வயல்களில் தண்ணீர் தேங்கி காணப்பட்டது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

வேரோடு சாய்ந்தது

தஞ்சையை அடுத்த துறையுண்டார்கோட்டையில் ரேஷன்கடை செயல்பட்டு வருகிறது. இந்த ரேஷன்கடை அருகே இருந்த பெரியமரம் நேற்று பெய்த மழையின் போது வேரோடு சாய்ந்தது. அந்த மரம் ரேஷன்கடை கட்டிடத்தின் மீது விழுந்தது. இதில் கட்டிடத்தின் மேற்கூரை சேதம் அடைந்தது. மரம் விழுந்த போது அந்த பகுதியில் ஆள்நடமாட்டம் இல்லாததால் எந்தவித உயிர் சேதமும் ஏற்படவில்லை.

தஞ்சை மாவட்டத்தில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

குருங்குளம் 47, வல்லம் 39, ஈச்சன்விடுதி 32, திருவையாறு 24, கும்பகோணம் 15, திருவிடைமருதூர் 13, பூதலூர் 13, திருக்காட்டுப்பள்ளி 12, வெட்டிக்காடு 7, தஞ்சை 6, பாபநாசம் 6, கல்லணை 4, அதிராம்பட்டினம் 4, அய்யம்பேட்டை 3, பேராவூரணி 2.


Next Story