போலீசார் முன்னிலையில் இரு தரப்பினர் மோதல்


போலீசார் முன்னிலையில் இரு தரப்பினர் மோதல்
x

வேப்பூர் அருகே கோவில் திருவிழாவில் போலீசார் முன்னிலையில் இருதரப்பினர் மோதிக்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கடலூர்

விருத்தாசலம்,

கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த சேவூர் கிராமத்தில் வரதராஜ பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் புனரமைக்கப்பட்டு வருகிற 3-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்த கோவிலில் ஒரு தரப்பினர் மட்டுமே உரிமை கொண்டாடி வந்ததாக கூறப்படுகிறது. இதற்கு மற்ற தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்தது.

இதுதொடர்பாக திட்டக்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு மற்றும் வருவாய் துறையினர் முன்னிலையில் நடைபெற்ற சமாதான பேச்சுவார்த்தையில் கிராமத்தில் உள்ள அனைவரும் ஒன்று சேர்ந்து கோவில் திருவிழாவை நடத்த தீர்மானிக்கப்பட்டது. இந்த நிலையில் கும்பாபிஷேகத்தையொட்டி நேற்று காலை ஒரு தரப்பினர் கோவில் கருடன் கொடி கம்பம் நடும் நிகழ்ச்சியில் ஈடுபட்டனர். இதனால் மற்றொரு தரப்பினர் கோவிலுக்கு வந்து கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இருதரப்பினர் மோதல்

இதுபற்றி தகவல் அறிந்ததும், வேப்பூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரா தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் இருதரப்பினரும் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டு மோதலில் ஈடுபட்டனர்.

பின்னர் போலீசார் இருதரப்பினரையும் விலக்கி விட்டு சமாதானம் செய்து வைத்தனர். தொடர்ந்து அவர்களிடம் இதுகுறித்து திட்டக்குடி தாலுகா அலுவலகத்தில் சமாதான கூட்டம் நடத்தி அதன் பிறகு கருடன் கொடிக்கம்பம் நடுவது என போலீசார் தெரிவித்தனர். இதையேற்ற இருதரப்பினரும், அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story