பாதுகாப்பை மேம்படுத்தும் விதமாக கண்காணிப்பு கேமராக்களை ஒருங்கிணைத்து அதி நவீன வேன்


பாதுகாப்பை மேம்படுத்தும் விதமாக கண்காணிப்பு கேமராக்களை ஒருங்கிணைத்து அதி நவீன வேன்
x

பாதுகாப்பை மேம்படுத்தும் விதமாகவும், போக்குவரத்து நெரிசலை சரிசெய்யவும், கண்காணிப்பு கேமராக்களை ஒருங்கிணைத்து அதி நவீன வேனை சென்னை போலீசுக்கு வாங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னை

கண்காணிப்பு கேமராக்களை ஒருங்கிணைத்து பாதுகாப்பை மேம்படுத்தும் நவீன நடமாடும் வேன் ஒன்றை தமிழக போலீசார் தற்போது முக்கியமான பாதுகாப்பு பணிக்கு பயன்படுத்தி வருகிறார்கள். ரூ.2 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ள இந்த நவீன வேனை வாங்கி சென்னை போலீசிலும் பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

நேற்று இந்த வேன் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கும் கொண்டுவரப்பட்டது. உயர் போலீஸ் அதிகாரிகள் அந்த வேனில் உள்ள வசதிகளை ஆய்வு செய்து பார்த்தனர்.

இந்த வேனின் பயன்பாடு குறித்து டி.ஜி.பி.சைலேந்திரபாபுவிடம் கேட்ட போது, அவர் கூறியதாவது:-

இந்த வேன் ஒரு நடமாடும் கட்டுப்பாட்டு அறை போன்றது. இதில் அதி நவீன சுழலும் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.

வயர்லெஸ் கருவி மூலம் இதில் இருந்து பேசலாம். முக்கிய நிகழ்வுகளில் ஏராளமான கேமராக்களை பொருத்தி இந்த வேனில் இருந்தபடியே கேமரா காட்சிகளை ஒருங்கிணைத்து பார்வையிடலாம். கூட்டத்தில் என்ன நடக்கிறது என்பதை அறிந்து உடனுக்குடன் இந்த வேனில் இருந்தே வயர்லெஸ் மூலம் பேசி சரிபடுத்தலாம். போக்குவரத்து நெரிசலை வேனில் இருந்தபடியே பார்த்து சரிசெய்யலாம். கூட்டத்தில் யாராவது தகராறு செய்யும் நோக்கில் ஆயுதங்களுடன் சுற்றினால் அவர்களை கண்டுபிடித்து உடனே நடவடிக்கை எடுக்கலாம். இப்படி நல்ல பயன் உள்ளதாக இந்த வேன் உள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.


Next Story