தமிழகத்தில் சுகாதார திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்படுகிறது மத்திய மந்திரி பாராட்டு


தமிழகத்தில் சுகாதார திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்படுகிறது மத்திய மந்திரி பாராட்டு
x

தமிழகத்தில் சுகாதார திட்டங்கள் சிறப்பான முறையில் செயல்படுத்தப்படுகிறது என மத்திய மந்திரி மன்சுக் மாண்டவியா பாராட்டினார்.

சென்னை,

மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா நேற்று முன்தினம் சென்னை வந்தார். பின்னர் நேற்று காலை தேசிய சுகாதார இயக்கம் ஏற்பாடு செய்த சைக்கிள் பேரணியை சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகையில் இருந்து அவர் தொடங்கி வைத்தார்.

பின்னர் சைக்கிள் பேரணியில் கலந்து கொண்டு சைக்கிள் ஓட்டி சென்றார்.

மெரினா கடற்கரை சாலை, சிவானந்தா சாலை, மன்றோ சிலை வழியாக மீண்டும் சேப்பாக்கம் விருந்தினர் மாளிகைக்கு மத்திய மந்திரி வந்தடைந்தார்.

பின்னர் சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பாராட்டு

அங்குள்ள 'ரோபாடிக்' தானியங்கி அறுவை சிகிச்சை மையத்துக்கு சென்ற அவர், அதன் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்.

பின்னர், அங்கு சிகிச்சை பெற்று வரும் இந்திய மகளிர் கால்பந்து வீராங்கனை மாரியம்மாள், குத்துச்சண்டை வீரர் பாலாஜி, விபத்தில் 2 கால்களிலும் எலும்பு முறிவு ஏற்பட்ட போதிலும் பிளஸ்-2 தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற சிந்து ஆகியோருக்கு அளிக்கப்பட்டு வரும் சிறப்பு சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்த மத்திய மந்திரி, சிகிச்சை அளித்த டாக்டர்களை பாராட்டினார்.

இதைத்தொடர்ந்து கருவுற்ற பெண்களுக்கான பரிசோதனை மையத்தை பார்வையிட்டார். இங்கு வசூலிக்கப்படும் பரிசோதனைக்கான கட்டணம் குறித்து கேட்டறிந்தார். பரிசோதனைக்கு மிக குறைவான கட்டணம் வசூலிப்பதற்கு அவர் பாராட்டு தெரிவித்தார்.

இதன் பின்பு மத்திய, மாநில அரசுகளின் சுகாதாரத்துறை உயர் அதிகாரிகளுடனான ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

மருத்துவ காப்பீடு திட்டம்

இந்த கூட்டத்தில் தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மை செயலாளர் டாக்டர் பி.செந்தில்குமார், தி.மு.க. அரசு பொறுப்பேற்ற பின்பு புதிதாக செயல்படுத்தப்பட்டுள்ள சுகாதார திட்டங்களின் செயல்பாடு குறித்தும், மத்திய அரசின் நிதி உதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் சுகாதார திட்டங்களின் செயல்பாடுகள் குறித்தும் எடுத்து கூறினார்.

இதைத்தொடர்ந்து மத்திய அரசின் சுகாதார திட்டத்தின் கீழ் ஆவடியில் அமைக்கப்பட்டுள்ள நல்வாழ்வு மையத்தின் திறப்பு விழா நடந்தது. ஓமந்தூரார் அரசு ஆஸ்பத்திரியில் இருந்தபடி காணொலி காட்சி மூலம் அந்த மையத்தை மன்சுக் மாண்டவியா திறந்து வைத்தார்.

விழாவில் அவர் பேசும்போது கூறியதாவது:-

மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 1.58 கோடி பேர் முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த திட்டத்தின் மூலம் ஏராளமானோர் பயன்பெற்று வருகின்றனர். தமிழகத்தில் இந்த திட்டம் சிறப்பான முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

ரூ.2,600 கோடி ஒதுக்கீடு

காசநோயை முற்றிலும் ஒழிக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கு தமிழக அரசும் தனது முழுமையான ஆதரவை தெரிவித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இதன் மூலம் 2025-ம் ஆண்டுக்குள் காசநோயை முழுமையாக ஒழித்து விட முடியும் என்ற நம்பிக்கை உள்ளது.

மத்திய அரசின் சுகாதார திட்டத்தின் கீழ் மாநிலங்களில் இதுவரை 7 ஆயிரத்து 52 நல்வாழ்வு மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்த மையங்களின் மூலம் 5 கோடியே 42 லட்சத்து 70 ஆயிரம் பேர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் பரிசோதனை, புற்று நோய் பரிசோதனையை மேற்கொண்டுள்ளனர். வருகிற டிசம்பர் மாதத்துக்குள் 9 ஆயிரத்து 135 நல்வாழ்வு மையங்கள் திறக்கப்படும்.

தமிழகத்தில் சுகாதார திட்டங்களை செயல்படுத்த தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் ரூ.2,600 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அடிப்படை கட்டமைப்புக்காக ரூ.404 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சுகாதார திட்டங்கள் சிறப்பான முறையில் செயல்படுத்தப்படுகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழ்நாடு மருத்துவ சேவைக்கழக இயக்குனர் தீபக் ஜேக்கப், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை இய்குனர் டாக்டர் செல்வநாயகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

உரத்தொழிற்சாலையில் ஆய்வு

பின்னர் மத்திய மந்திரி மன்சுக் மாண்டவியா, சென்னை மணலியில் உள்ள மெட்ராஸ் உரத்தொழிற்சாலையை நேற்று பார்வையிட்டார்.

அப்போது, ஆலையின் செயல்பாடு மற்றும் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்த அவர், நமது விவசாயிகளின் தேவைகளை பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்குமாறு ஆலை நிர்வாகத்தை அறிவுறுத்தினார். ஆலையின் கட்டுப்பாட்டு அறையையும் பார்வையிட்ட அவர், கட்டுப்பாட்டு அறை இயங்கும் விதம் குறித்து ஊழியர்களுடன் கலந்துரையாடினார்.


Next Story