பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் தவிர்க்க வேண்டும்


பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் தவிர்க்க வேண்டும்
x

மலைப்பகுதியை பாதுகாக்க வேண்டியது அனைவரது பொறுப்பு என்றும், பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்றும் தூய்மைக்கான மக்கள் இயக்க விழிப்புணர்வு நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையாளர் அறிவுரை வழங்கினார்.

கோயம்புத்தூர்

வால்பாறை

மலைப்பகுதியை பாதுகாக்க வேண்டியது அனைவரது பொறுப்பு என்றும், பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்றும் தூய்மைக்கான மக்கள் இயக்க விழிப்புணர்வு நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையாளர் அறிவுரை வழங்கினார்.

தூய்மைக்கான மக்கள் இயக்கம்

வால்பாறை நகராட்சி நிர்வாகம் சார்பில் கடந்த ஒரு மாதமாக எனது குப்பை, எனது பொறுப்பு என்ற திட்டம் மூலம் தூய்மைக்கான மக்கள் இயக்கம் தொடங்கி பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

ஒவ்வொரு பள்ளிக்கூடங்களிலும், பொதுமக்கள் கூடும் இடங்களிலும் குப்பைகளை தரம் பிரித்தல், பொது இடங்களில் குப்பை கொட்டுவதை தவிர்த்தல், பிளாஸ்டிக் ஒழிப்பு, மரக்கன்றுகள் நடுதல் போன்ற பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. மேலும் தூய்மைக்கான மக்கள் இயக்க விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

இதன் ஒரு பகுதியாக நகராட்சி ஆணையாளர் பாலு தலைமையில் வால்பாறை அரசு மேல்நிலைப்பள்ளியில் நகராட்சி துப்புரவு பணியாளர்கள், பொதுமக்கள், மகளிர் சுய உதவிக்குழுவினர், அங்கன்வாடி பணியாளர்கள், மக்களை தேடி மருத்துவ திட்ட பணியாளர்கள், இயற்கை வன வள பாதுகாப்பு மைய பிரதிநிதிகள் ஆகியோருடன் இணைந்து பள்ளி வளாகத்திலும், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்திலும் நடந்த நிகழ்ச்சியின்போது வால்பாறை மலைப்பகுதியில் வளரும் மரக்கன்றுகள் நடப்பட்டது.

தவிர்க்க வேண்டும்

இதுகுறித்து ஆணையாளர் பாலு பேசியதாவது:-

நாம் வாழக்கூடிய வால்பாறை மலைப்பகுதியானது அரிய பொக்கிஷமாக பாதுகாக்கப்பட வேண்டியது ஆகும். இந்த மலைப்பகுதியை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு நம் அனைவருக்கும் உள்ளது. குப்பைகளை பொது இடங்களில், வீதிகளில் வீசியெறிவது, நிலத்துக்கு கேடு விளைவிக்கும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது.

குறிப்பாக ஒருமுறை மட்டுமே பயன்படுத்தி விட்டு தூக்கி எறியும் எந்தவொரு பொருளையும் பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்கள், தனியார் எஸ்டேட் நிறுவனங்களில் மை பேனாக்களையே பயன்படுத்த பழகிக்கொள்ள வேண்டும். குடியிருப்பு பகுதிகளை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும். நகராட்சி நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்படும் அனைத்து விதமான சுகாதார, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, நோய் தடுப்பு போன்ற அறிவிப்புகளுக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதில் நகராட்சி கட்டிட ஆய்வாளர் அறிவுடைநம்பி, கல்லூரி முதல்வர் செல்வமுத்துகுமாரசாமி, இயற்கை வன வள பாதுகாப்பு மைய ஆராய்ச்சியாளர் சீனிவாசன் ஆகியோர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை துப்புரவு ஆய்வாளர் செல்வராஜ் மற்றும் துப்புரவு களப்பணியாளர்கள் செய்திருந்தனர்.


Next Story