தடுப்புச்சுவரில் மோதி வேன் சாய்ந்தது
மேட்டுப்பாளையம் கோத்தகிரி சாலையில் தடுப்புச்சுவரில் மோதி வேன் சாய்ந்தது.
மேட்டுப்பாளையம்
மேட்டுப்பாளையம் -கோத்தகிரி சாலையில் தடுப்புச்சுவரில் மோதி வேன் சாய்ந்தது. அது மரத்தில் சிக்கி நின்றதால் சுற்றுலா பயணிகள் தப்பினர்
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது
ஊட்டிக்கு சுற்றுலா
சென்னை அம்பத்தூர் அய்யப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் சம்பத்குமார் (வயது 58). இவர் தனது உறவினர்கள் 17 பேருடன் கடந்த 27-ந் தேதி ஊட்டிக்கு வேனில் சுற்றுலா வந்தார். டிரைவர் வெள்ளைச்சாமி என்பவர் வேனை ஓட்டினார். அவர்கள், ஊட்டியில் 2 நாட்களாக தங்கி சுற்றுலா தலங்களை கண்டு ரசித்தனர்.
அவர்கள், நேற்று முன்தினம் ஊட்டியில் இருந்து கோத்தகிரி வழியாக ஊருக்கு புறப்பட்டனர். அதன்படி அவர்கள், மேட்டுப் பாளையம் கோத்தகிரி சாலையில் 2-வது கொண்டை ஊசி வளைவு அருகே சுற்றுலா வேனில் வந்து கொண்டு இருந்தனர்.
வேன் சாய்ந்தது
அப்போது வேன் திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ரோட்டோரத்தில் இருந்த தடுப்பு சுவரில் மோதியது. இதில் வேன் சுவரை இடித்து கொண்டு மலைப்பாதையில் சாய்ந்தது. இதனால் வேனுக்குள் இருந்தவர்கள் கூச்சல் போட்டனர்.
இதற்கிடையே அங்கிருந்த மரத்தின் மீது மோதி சிக்கியதால் வேன் சாய்ந்தபடி நின்றது. இது குறித்த தகவலின் பேரில் மேட்டுப்பாளையம் போலீசார் விரைந்து வந்து, அக்கம் பக்கத்தினர் உதவியுடன் வேனில் சிக்கித் தவித்தவர்களை மீட்டனர்.
பயணிகள் காயம்
பின்னர் அவர்களை மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனை யில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்த விபத்தில் சம்பத்குமார் (52), சங்கீதா (32), முகேஷ் (21) உள்ளிட்டோருக்கு காயம் ஏற்பட்டது. இதில்சம்பத்குமார் மேல்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
ரோட்டோரத்தில் இருந்த தடுப்புச்சுவரை உடைத்து கொண்டு சென்ற வேன் மரத்தின் மோதி நின்றதால் சுற்றுலா பயணிகள் அதிஷ்டவசமாக உயிர் தப்பினர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.