வேன் கவிழ்ந்து 10 பேர் காயம்
உளுந்தூர்பேட்டை அருகே வேன் கவிழ்ந்த விபத்தில் 10 பேர் காயமடைந்தனர்.
உளுந்தூர்பேட்டை,
தூத்துக்குடி மாவட்டம் வைப்பார் கோட்டைமேடு பகுதியை சேர்ந்தவர் பாண்டியன் (வயது 42). இவர் துக்க நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள தூத்துக்குடியில் இருந்து வேன் ஒன்றில் தனது உறவினர்களுடன் சென்னைக்கு புறப்பட்டு சென்றார். உளுந்தூர்பேட்டை அருகே உள்ள வண்டிபாளையம் பகுதியில் சென்றபோது வேனின் பின்பக்க டயர் திடீரென வெடித்தது. இதில் வேன் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடி சாலையில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் வேன் டிரைவரான தூத்துக்குடியை சேர்ந்த குமரேசன் மற்றும் கிருஷ்ணன், முத்துமணி, பாண்டியன், செல்வி, சண்முகம், மகராசி, ராஜேஸ்வரி உள்பட 10 பேர் காயமடைந்தனர். இது குறித்த தகவலின் பேரில் திருநாவலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து காரணமாக சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.