வயலில் வேன் கவிழ்ந்தது
சோமரசம்பேட்டை அருகே வேன் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இதில் வேனில் இருந்த 30 மாணவ-மாணவிகள் லேசான காயத்துடன் உயிர் தப்பினர்.
சோமரசம்பேட்டை அருகே வேன் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இதில் வேனில் இருந்த 30 மாணவ-மாணவிகள் லேசான காயத்துடன் உயிர் தப்பினர்.
வேன்
திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டையில் தனியார் பள்ளி உள்ளது. இங்கு அதவத்தூர், கொய்யாத்தோப்பு, வியாழன்மேடு, புலியூர், பள்ளக்காடு மற்றும் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். வாடகை வேன் மூலம் மேற்கண்ட பகுதி மாணவ-மாணவிகளை பள்ளிக்கு அழைத்து வருவது வழக்கம். அதன்படி நேற்று காலை பள்ளக்காடு பகுதியை சேர்ந்த 30 மாணவ-மாணவிகளை ஏற்றிக்கொண்டு வேன் பள்ளிக்கு வந்து கொண்டிருந்தது.
வேன் கொய்யாத்தோப்பு பகுதி மெயின்ரோட்டில் வந்த போது, எதிரே மோட்டார் சைக்கிளில் வாலிபர் ஒருவர் வேன் மீது மோதுவது போல் வந்தார். இதனால் தடுமாறிய டிரைவர் வேனை சற்று திருப்பியுள்ளார். இதில் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையோரத்தில் உள்ள வயலில் கவிழ்ந்தது. அப்போது, வேனில் இருந்த மாணவ-மாணவிகள் பயத்தில் சத்தம் போட்டனர்.
லேசான காயம்
இந்த விபத்தை கண்ட அப்பகுதியினர் வேனில் இருந்த மாணவ-மாணவிகளை விரைவாக மீட்டனர். இதில் வேனில் இருந்த 30 மாணவ-மாணவிகளுக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அவர்கள் அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு முதலுதவி சிகிச்சைக்கு பின் வீடு திரும்பினர்.
இந்த தகவல் மாணவ-மாணவிகளின் பெற்றோருக்கு தெரியவந்ததால் அவர்கள் பதற்றத்துடன் அங்கு விரைந்து வந்தனர். தங்கள் குழந்தைகளுக்கு லேசான காயம் ஏற்பட்டதால் நிம்மதியுடன், அவர்களை வீட்டுக்கு அழைத்து சென்றனர். இந்த சம்பவம் தொடர்பாக சோமரசம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சாலையை அகலப்படுத்த கோரிக்கை
விபத்து குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், இந்த பகுதியில் உள்ள சாலை மிகவும் குறுகலாக உள்ளது. ஒரு வாகனம் வரும்போது எதிரே வரும் வாகனத்திற்கு வழி விடக்கூட வசதி இல்லாததால் தான் இந்த விபத்து நடந்துள்ளது. எனவே விபத்தை தடுக்க சாலையை அகலப்படுத்த வேண்டும் என்றனர். இந்த விபத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.