டயர் வெடித்து நடுரோட்டில் கவிழ்ந்த வேன்


டயர் வெடித்து நடுரோட்டில் கவிழ்ந்த வேன்
x

வேடசந்தூர் அருகே கோவிலுக்கு சென்றுகொண்டிருந்தபோது டயர் வெடித்து நடுரோட்டில் வேன் கவிழ்ந்த விபத்தில் 15 பேர் படுகாயம் அடைந்தனர்.

திண்டுக்கல்

வேனில் பயணம்

ஈரோடு மாவட்டம் வெள்ளக்கோவிலில் நாட்ராயன் நாச்சிமுத்து கோவில் உள்ளது. இந்த கோவிலில், கிடா வெட்டி வழிபாடு நடத்துவதற்காக தேனி மாவட்டம் பூசாரிகவுண்டன்பட்டியை சேர்ந்த 16 பேர் ஒரு வேனில் புறப்பட்டு சென்றனர். வேனை, பூசாரிகவுண்டன்பட்டியை சேர்ந்த வீரக்குமார் (வயது 32) ஓட்டினார்.

திண்டுக்கல்-கரூர் நான்கு வழிச்சாலையில், வேடசந்தூரை அடுத்த நாகம்பட்டி பிரிவு அருகே வேன் வந்து கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக வேனின் பின்பக்க டயர் வெடித்தது. இதனையடுத்து கட்டுப்பாட்டை இழந்த வேன் தாறுமாறாக சென்று நடுரோட்டில் கவிழ்ந்தது.

15 பேர் படுகாயம்

இந்த விபத்தில் வேன் டிரைவர் வீரக்குமார், வேனில் பயணம் செய்த குணாவதி (52), அருண்குமார் (27), அமுதா (41), போதுமணி (52), பிரியதர்சினி (22), சர்வேஸ்வரன் (37), மாலதி (49), ஜெயந்தி (42), சீலமுத்து (54) ஆகியோர் உள்பட 15 பேர் படுகாயம் அடைந்தனர்.

அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக வேடசந்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்து தகவல் அறிந்த நெடுஞ்சாலை ரோந்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பின்னர் நடுரோட்டில் கவிழ்ந்து கிடந்த வேனை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீரமைத்தனர்.

இந்த விபத்து தொடர்பாக வேடசந்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story