டயர் வெடித்ததால் வேன் சாலையில் கவிழ்ந்தது; 15 பேர் காயம்


டயர் வெடித்ததால் வேன் சாலையில் கவிழ்ந்தது; 15 பேர் காயம்
x

விராலிமலை அருகே டயர் வெடித்ததால் வேன் சாலையில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் 15 பேர் காயம் அடைந்தனர்.

புதுக்கோட்டை

குலதெய்வ கோவில்

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர் பேட்டை எஸ். மலையனூரை சேர்ந்தவர் கண்ணன் (வயது 60). இவர் தனது உறவினர்களான மாணிக்கவேல் (48), இவரது மனைவி ராஜேஷ்வரி (45), கல்வராயன் (42), சத்யராஜ் (33), இவரது மனைவி நந்தினி (29) உள்பட 26 பேருடன் தேனி மாவட்டத்தில் உள்ள குலதெய்வ கோவிலுக்கு ஒரு வேனில் சென்றார்.

பின்னர் அவர்கள் சாமி தரிசனம் முடிந்து நேற்று மதுரை வழியாக தங்களது சொந்த ஊருக்கு அதே வேனில் திரும்பி சென்று கொண்டு இருந்தனர். வேனை கடலூர் மாவட்டம், விருத்தாசலம் கொட்டார குப்பத்தை சேர்ந்த அய்யப்பன் (34) என்பவர் ஓட்டி சென்றார்.

15 பேர் காயம்

இந்தநிலையில் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே மதுரை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் குறிச்சிப்பட்டி இணைப்பு சாலை அருகே வேன் சென்றபோது திடீரென பின்பக்க டயர் வெடித்தது. இதில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் தாறுமாறாக சென்று சாலையின் நடுவே இருந்த தடுப்பு கட்டை மீது மோதி கவிழ்ந்தது. இந்த விபத்தில் வேனில் பயணம் செய்த அனைவரும் இடிபாடுகளில் சிக்கி அலறினர். இதனைக்கண்ட அவ்வழியாக சென்றவர்கள் வேனில் இருந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

இதற்கிடையில் அங்கு வந்த இலுப்பூர் போலீஸ் துணை சூப்பிரண்டு காயத்ரி மற்றும் விராலிமலை போலீசார் காயமடைந்த கண்ணன், மாணிக்கவேல், ராஜேஷ்வரி, கல்வராயன், சத்யராஜ், நந்தினி உள்பட 15 பேரை மீட்டு திருச்சி அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மற்ற அனைவரும் விராலிமலை அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று சென்றனர். மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story