சேறும், சகதியுமான வானமாதேவி -பெத்தாங்குப்பம் சாலை
கடலூர் அருகே சேறும், சகதியுமான சாலையால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.
குண்டும், குழியுமான சாலை
கடலூர் திருவந்திபுரத்தில் இருந்து பாலூர் வழியாக பண்ருட்டிக்கு பிரதான சாலை செல்கிறது. இந்த சாலையில் இருந்து வானமாதேவிக்கு செல்லும் வழியில் கெடிலம் பாலம் உள்ளது. இந்த பாலம் வழியாக வானமாதேவி, பெத்தாங்குப்பம், கட்டாரச்சாவடி, சூரியன்பேட்டை, விலங்கல்பட்டு, நடுவீரப்பட்டு, சி.என்.பாளையம் உள்ளிட்ட கிராமங்களுக்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்கிறார்கள். இது தவிர பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளும் வானமாதேவி பஸ் நிறுத்தம் வந்து தான் கடலூர், பண்ருட்டிக்கு சென்று வருகிறார்கள். இதனால் இந்த சாலையில் எப்போதும் பொதுமக்கள் நடமாட்டம் இருந்து கொண்டே இருக்கும். அன்றாடம் கூலி வேலைக்கு செல்வோரும் இந்த சாலை வழியாகத்தான் நடந்தும், சைக்கிளிலும், இரு சக்கர வாகனங்களிலும் சென்று வருகின்றனர். ஆனால் இவர்கள் சென்று வர முடியாத அளவுக்கு இந்த பாலத்தில் இருந்து சுமார் 200 மீட்டர் தூரமுள்ள சாலை குண்டும், குழியுமாக கிடக்கிறது.
பொதுமக்கள் அவதி
மழைக்காலங்களில் அந்த பள்ளத்தில் தண்ணீர் தேங்கினால் மாணவர்கள், பொதுமக்கள் யாரும் அந்த சாலையை கடந்து செல்ல முடியாத அளவுக்கு உடைகள் சேறும், சகதியுமாக மாறி விடும். இதனால் அப்பகுதி மக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். இதற்கிடையில் அந்த சாலையை சீரமைத்து தர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை வைத்ததன்பேரில், அதில் செம்மண் கொட்டப்பட்டது. அதன்பிறகு சாலை அமைக்கவில்லை. இதனால் மழைக்காலங்களில் இந்த சாலை செம்மண் நிறத்தில் சேறும், சகதியுமாக மாறி விடுகிறது. பள்ளி மாணவர்கள் சீருடையில் வந்தால், செம்மண் நிறத்தில் மாறி விடும். இதனால் அவர்கள் பள்ளிக்கு செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. வாகன ஓட்டிகள் சிலர் வழுக்கி கீழே விழுந்து செல்கின்றனர். மழை பெய்தால் குட்டைகளில் தண்ணீர் வருமோ? இல்லையோ? இந்த சாலையில் தண்ணீர் தேங்கி மிகவும் மோசமாகி விடுகிறது. ஆகவே பொதுமக்கள் நலன் கருதி, குறிப்பாக மாணவர்கள் நலன் கருதி, இந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.