கந்து வட்டி கொடுமை: ஆயுதப்படை காவலர் தற்கொலை...!
கந்து வட்டி கொடுமை காரணமாக ஆயுதப்படை காவலர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
கடலூர்,
கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே கந்து வட்டி கொடுமை காரணமாக ஆயுதப்படை காவலர் செல்வகுமார்(27) என்பவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். கடந்த 1ம் தேதி விஷம் அருந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்துள்ளார். இது பற்றி கடலூர் புதுநகர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கந்து வட்டி கொடுமையால் ஆயுதப்படை காவலர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வழக்கின் முழுவிவரம்:-
கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே மதுவானைமேடு துறிஞ்சிக்கொல்லையை சேர்ந்தவர் முருகன் மகன் செல்வக்குமார் (வயது 27). இவர் உளுந்தூர்பேட்டை 10-வது பட்டாலியனில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார்.
இவர் கடந்த 1-ம் தேதி கடலூர் வந்த அவர் நீதிமன்றம் அருகே திடீரென மயங்கி விழுந்தார். இது பற்றி தகவல் அறிந்ததும் கடலூர் புதுநகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கதிரவன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் அங்கு மயங்கி கிடந்த செல்வக்குமாரை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். தற்கொலை முயற்சி அங்கு அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில், அவர் விஷம் குடித்தது தெரியவந்தது.
குடும்ப செலவுக்காக ஒரு பெண்ணிடம் ரூ.5 லட்சம் கடன் வாங்கிய நிலையில், அந்த பணத்தை திருப்பி செலுத்தி விட்டாராம். ஆனால் அந்த பெண் புரோ நோட்டை கொடுக்காமல், மீண்டும் பணம் கேட்டு தொந்தரவு செய்ததாகவும், இதனால் மன வேதனை அடைந்த அவர் விஷம் குடித்து போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு வந்த போது, மயங்கி விழுந்தது தெரியவந்தது. இதற்கிடையில் அவரது உடல் நிலை மோசமானதால், கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் இருந்து மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இது பற்றி கடலூர் புதுநகர் போலீசார் விசாரித்து வந்தனர்.