கருப்பு பேட்ஜ் அணிந்து பங்கேற்ற துணைத்தலைவர்


கருப்பு பேட்ஜ் அணிந்து பங்கேற்ற துணைத்தலைவர்
x
தினத்தந்தி 30 Aug 2023 11:45 PM GMT (Updated: 30 Aug 2023 11:45 PM GMT)

தேனி மாவட்ட ஊராட்சி கூட்டத்தில் துணைத்தலைவர் கருப்பு பேட்ஜ் அணிந்து பங்கேற்றார். பா.ஜ.க., தி.மு.க. கவுன்சிலர்கள் காரசாரமாக விவாதம் செய்தனர்.

தேனி

மாவட்ட ஊராட்சி கூட்டம்

தேனி மாவட்ட ஊராட்சி குழு கூட்டம், மாவட்ட ஊராட்சி கூட்டரங்கில் நேற்று நடந்தது. மாவட்ட ஊராட்சி தலைவர் பிரிதா நடேஷ் தலைமை தாங்கினார். கூட்டத்தில் வளர்ச்சித் திட்டப் பணிகள், செலவினங்கள் தொடர்பாக 18 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் அ.தி.மு.க. கவுன்சிலர் அல்லிதேவி பேசும்போது, 'சாக்குலூத்து மெட்டுச்சாலை அமைக்க வேண்டும். கம்பத்தில் அரசு கலைக் கல்லூரி தொடங்க வேண்டும். சுதந்திர தின விழா உள்ளிட்ட அரசு விழாக்களுக்கு மாவட்ட ஊராட்சி கவுன்சிலர்களுக்கு அழைப்பிதழ் கொடுக்கப்படுவது இல்லை. அரசு விழாக்களில் மாவட்ட ஊராட்சி கவுன்சிலர்களை புறக்கணிக்கக்கூடாது' என்றார்.

கருப்பு பேட்ஜ்

பின்னர் துணைத்தலைவர் ராஜபாண்டியன் (பா.ஜ.க.) பேசும்போது, 'சந்திரயான் 3 திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டதால் பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். மாவட்ட ஊராட்சி கவுன்சிலர்களை அரசு விழாக்களில் புறக்கணிக்கப்படுகின்றனர். தமிழகத்தில் திராவிட மாடல் ஆட்சி என்று சொல்லிக் கொண்டு மாவட்ட ஊராட்சிகளை முடக்கும் வகையில் அரசு செயல்படுகிறது. மாவட்ட ஊராட்சிகளுக்கான நிதி குறைக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி கவுன்சிலர்களுக்கு சம்பளம் அறிவித்த அரசு, மாவட்ட ஊராட்சி, ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள், கிராம ஊராட்சி உறுப்பினர்களுக்கு சம்பளம் அறிவிக்காமல் புறக்கணித்துள்ளது. பாரபட்சம் இல்லாமல் அனைவருக்கும் சம்பளம் வழங்க வேண்டும் என்றும், ஊராட்சிகளுக்கான நிதியை குறைக்காமல் வழங்க வேண்டும் என்றும் அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் நான் கருப்பு பேட்ஜ் அணிந்து பங்கேற்க உள்ளேன்' என்று கூறினார்.

தி.மு.க. ஆட்சேபனை

பின்னர் அவர் கருப்பு பேட்ஜ் அணிந்து கூட்டத்தில் பங்கேற்றனர். அதற்கு தி.மு.க. கவுன்சிலர் பாண்டியன் பேசும்போது, 'மாநில அரசின் மீது அரசியல் நோக்கத்தில் குற்றம்சாட்டக்கூடாது. மத்திய அரசு நிறைய திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யவில்லை. பல மாநிலங்களில் ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் சம்பளம் உடனுக்குடன் வழங்கப்படுகிறது. ஆனால், இங்கு 6 வாரங்கள் ஆகியும் சம்பளம் வழங்க முடியவில்லை. மத்திய அரசு நிதி ஒதுக்காமல் இருப்பதற்கு என்ன செய்வது?' என்றார். மற்றொரு தி.மு.க. கவுன்சிலர் தமயந்தியும் இதற்கு ஆட்சேபனை தெரிவித்து கருத்துக்களை தெரிவித்தார்.

அதற்கு துணைத்தலைவர், 'இதை நான் அரசியலுக்காக செய்யவில்லை' என்றார். மாறி, மாறி அவர்கள் காரசாரமாக விவாதம் செய்தனர். இது கூட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர், மாவட்ட ஊராட்சி உள்பட ஊரக உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கும் சம்பளம் வழங்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


Related Tags :
Next Story