அரசு பஸ்சை சிறைபிடித்த கிராம மக்கள்


அரசு பஸ்சை சிறைபிடித்த கிராம மக்கள்
x

அரசு பஸ்சை கிராம மக்கள் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்

மதுரை

திருமங்கலம்

திருமங்கலத்தை அடுத்த கள்ளிக்குடி தாலுகா சுவாமி மல்லம்பட்டிக்கு பெரியார் பஸ் நிலையத்திலிருந்து திருமங்கலம், செங்கப்படை, சுவாமி மல்லம்பட்டி வழியாக சிவரக்கோட்டை செல்லக்கூடிய அரசு பஸ் நாள்தோறும் காலை, மதியம், இரவு என மூன்று நேரங்களில் சென்று வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு திருமங்கலம் பஸ் நிலையத்திற்கு வரவேண்டிய பஸ் வராததால் சுவாமி மல்லம்பட்டிக்கு செல்லக்கூடிய 20-க்கும் மேற்பட்ட பயணிகள் காத்திருந்தனர். வெகு நேரமாகியும் பஸ் வராததால் அங்கிருந்த போக்குவரத்து ஊழியர்களிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து திருமங்கலம் நகர் போலீசார் திருமங்கலம் அரசு போக்குவரத்துக்கழக பணிமனை மேலாளருக்கு தகவல் தெரிவித்து பஸ் அனுப்பி வைக்க உத்தரவிட்டனர். அதன்பின்னர் திருமங்கலத்தில் இருந்து ஆரப்பாளையம் செல்லக்கூடிய இரவு நேர பஸ்சை போக்குவரத்து ஊழியர்கள் பயணிகளுக்கு ஏற்பாடு செய்தனர்.

ஆனால் பஸ்சில் ஏறிய பயணிகளிடம் கண்டக்டர் சுவாமி மல்லம்பட்டி செல்ல டிக்கெட் விலை 23 ரூபாய் என கூறியுள்ளார். அதற்கு பயணிகள் வழக்கமாக 10 ரூபாய்தான் கொடுப்போம் என கேட்டுள்ளனர். அதற்கு கண்டக்டர் 23 ரூபாய் கொடுத்தால் பயணம் செய்யுங்கள் எனக்கூறி அனைவரையும் இறக்கிவிட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து பயணிகள் ஆட்டோ மூலம் ஊருக்கு சென்றனர். இந்நிலையில் நேற்று சிவரக்கோட்டையில் இருந்து மீண்டும் திருமங்கலம் நோக்கி வந்த அரசு பஸ்சை சுவாமி மல்லம்பட்டி கிராம மக்கள் 50-க்கும் மேற்பட்டோர் சிறை பிடித்து போராட்டம் நடத்தினர். கள்ளிக்குடி போலீசார் மற்றும் போக்குவரத்து பணிமனை அலுவலர்கள் அங்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் கூறியதை அடுத்து கிராம மக்கள் கலைந்து சென்றனர்.


Next Story