சேதமடைந்த சாலையை சீரமைக்க கோரி அரசு பஸ்சை சிறைப்பிடித்து கிராம மக்கள் போராட்டம் செஞ்சி அருகே பரபரப்பு
செஞ்சி அருகே சேதமடைந்த சாலையை சீரமக்க கோரி அரசு பஸ்சை கிராம மக்கள் சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
செஞ்சி,
பஸ் சிறை பிடிப்பு
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த ரெட்டிபாளையத்தில் இருந்து தென்பாலை கிராமத்திற்கு செல்லும் சாலை மிகவும் சேதமடைந்து காணப்பட்டது. இதனால் இந்த சாலை வழியாக அரசு பஸ் சரிவர இயக்கப்படவில்லை. இருசக்கர வாகன ஓட்டிகளும் சேதமடைந்த சாலையில் சென்று வர பெரும் சிரமமடைந்தனர். இதனால் பாதிக்கப்பட்ட தென்பாலை கிராம மக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் நேற்று காலை தென்பாலை பஸ் நிறுத்தம் அருகே திரண்டு வந்தனர்.
பின்னர் அவர்கள் சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என கண்டன கோஷம் எழுப்பியபடி அவ்வழியாக வந்த அரசு டவுன் பஸ்சை சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
போலீசார் பேச்சுவார்த்தை
இதுபற்றி தகவல் அறிந்த சத்தியமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பேசி சேதமடைந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுப்பதாக கூறினர். இதனை ஏற்ற கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு, கலைந்து சென்றனர். இந்த போராட்டம் காரணமாக அப்பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.