இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியீடு


இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியீடு
x

பெரம்பலூர் மாவட்டத்தில் காலியாக இருந்த ஒரு கிராம ஊராட்சி தலைவர், 2 ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டது.

பெரம்பலூர்

போட்டியின்றி தேர்வு

பெரம்பலூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக இருந்த ஒரு கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கும், 4 ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவிகளுக்கும் ஜூலை 9-ந் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படுவதாக ஏற்கனவே மாநில தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இதில் வேப்பூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கீழப்புலியூர் கிராம ஊராட்சி 8-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு ஜெகவள்ளி என்பவரும், ஆலத்தூர் ஒன்றியத்துக்குட்பட்ட இரூர் கிராம ஊராட்சி 1-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு மணி என்பவரும் ஏற்கனவே போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். இதனால் அந்த பகுதிகளில் இடைத்தேர்தல் நடத்தப்படவில்லை.

71.44 சதவீத ஓட்டுப்பதிவு

ஆனால் பெரம்பலூர் ஒன்றியத்துக்குட்பட்ட மேலப்புலியூர் கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு 3 பேரும், ஆலத்தூர் ஒன்றியத்துக்குட்பட்ட பிலிமிசை ஊராட்சி 4-வது வார்டு உறுப்பினர் பதவிக்கும், வேப்பந்தட்டை ஒன்றியத்துக்குட்பட்ட வி.களத்தூர் ஊராட்சி 7-வது வார்டு உறுப்பினர் பதவிக்கும் தலா 2 பேரும் போட்டியிட்டனர். இதனால் அந்த பகுதிகளில் இடைத்தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு கடந்த 9-ந் தேதி நடந்து முடிந்தது. மேலப்புலியூர் கிராம ஊராட்சி தலைவர் தேர்தலில் 71.87 சதவீத வாக்குகளும், பிலிமிசை ஊராட்சி 4-வது வார்டில் 84.32 சதவீத வாக்குகளும் பதிவானது. வி.களத்தூர் ஊராட்சி 7-வது வார்டில் 63.978 சதவீத வாக்குகளும் பதிவானது. பெரம்பலூர் மாவட்டத்தில் ஒரு கிராம ஊராட்சி தலைவர் பதவி, 2 ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான நடந்த இடைத்தோ்தலில் மொத்தம் 71.44 சதவீத வாக்குகள் பதிவானது.

வாக்கு எண்ணிக்கை

மேலப்புலியூர் கிராம ஊராட்சி தலைவர் தேர்தலில் பதிவான வாக்குகள் அடங்கிய 9 வாக்கு பெட்டிகள், அதற்கான வாக்கு எண்ணும் மையமான பெரம்பலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும், பிலிமிசை ஊராட்சி 4-வது வார்டு உறுப்பினர் தேர்தலில் பதிவான வாக்குகள் அடங்கிய வாக்கு பெட்டி, அதற்கான வாக்கு எண்ணும் மையமான ஆலத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும், வி.களத்தூர் ஊராட்சி 7-வது உறுப்பினர் தேர்தலில் பதிவான வாக்குகள் அடங்கிய வாக்கு பெட்டி, அதற்கான வாக்கு எண்ணும் மையமான வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும் தனி அறையில் வாக்கு பெட்டிகள் பாதுகாப்பாக பூட்டி `சீல்' வைக்கப்பட்டிருந்து. மேலும் வாக்கு பெட்டிகள் இருந்த 3 இடங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. வாக்கு எண்ணிக்கை நாளான நேற்று கிராம ஊராட்சி தலைவர், ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கு ஒதுக்கப்பட்ட மையத்தில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.

9 சுற்றுகளாக...

முன்னதாக காலை 8 மணிக்கு முன்னதாக வாக்கு எண்ணும் மையத்திற்கு வந்திருந்த வேட்பாளர்கள் மற்றும் வேட்பாளர்களின் முகவர்கள், வாக்கு எண்ணும் மையத்தில் பணியாற்ற வந்திருந்த அலுவலர்களை போலீசார் சோதனையிட்டு அடையாள அட்டை வைத்திருந்தவர்களை மட்டும் உள்ளே அனுமதித்தனர். முதலில் வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்டு இருந்த அறையின் சீல் சரியாக காலை 8 மணி அளவில் வேட்பாளர்கள், முகவர்கள் முன்னிலையில் உடைத்தனர். அதன்பிறகு வாக்குப்பெட்டிகள் வாக்குச்சீட்டு பிரிக்கும் இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டு வாக்குப்பெட்டிகளின் சீல்கள் உடைக்கப்பட்டு, வாக்குச்சீட்டு தனித்தனியாக பிரிக்கப்பட்டு எண்ணப்பட்டன. மேலப்புலியூர் கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு பதிவான வாக்குகள் 9 சுற்றுகளாக எண்ணப்பட்டது.

வெற்றி பெற்றவர்கள் விவரம்

மதியம் 12.30 மணியளவில் வாக்கு எண்ணிக்கை முடிந்து அறிவிப்பு வெளியிடப்பட்டது. மேலப்புலியூர் கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட்ட மனோகரன் மொத்தம் 2,514 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவர் தன்னை எதிா்த்து போட்டியிட்ட வேல்முருகனை 1,719 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். இதேபோல் பிலிமிசை ஊராட்சி 4-வது வார்டு உறுப்பினர் தேர்தலில் பதிவான வாக்குகள் காலை 9.15 மணிக்கு எண்ணி முடிக்கப்பட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதில் அன்னக்கிளி முத்துசாமி என்பவர் மொத்தம் 122 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட விமலாதேவியை 63 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். இதேபோல் வி.களத்தூர் 7-வது வார்டு உறுப்பினர் தேர்தலில் பதிவான வாக்குகள் காலை 8.50 மணியளவில் எண்ணி முடிக்கப்பட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதில் 21 வயதே ஆன சபியா பேகம் சையது உசேன் என்பவர் மொத்தம் 153 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட மும்தாஜ் பேகத்தை 70 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

நாளை மறுநாள் பதவி ஏற்பு

இதையடுத்து இடைத்தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கும், போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு தேர்தல் நடத்திய அலுவலர்கள் சான்றிதழ் வழங்கினர். வெற்றி பெற்றவர்களின் ஆதரவாளர்கள் வாக்கு எண்ணும் மையத்திற்கு வெளியே, வெற்றி பெற்றவர்களுக்கு மாலை அணிவித்தும், பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர். இடைத்தேர்தலில் வெற்றி பெற்றவர்களும், போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டவர்களும் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) பதவி ஏற்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story