வனப்பகுதியில் கட்டப்படும் சுவரை அகற்ற வேண்டும்
கொடைக்கானல் பில்லர்ராக் அருகே வனப்பகுதியில் கட்டப்படும் சுவரை அகற்ற வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பில்லர்ராக்
'மலைகளின் இளவரசி'யான கொடைக்கானல் வனப்பகுதிகளில் முக்கிய சுற்றுலா இடங்களில் ஒன்றாக பில்லர் ராக் உள்ளது. இந்த பகுதி வனத்துறையினர் கட்டுப்பாட்டில் உள்ளது. மேலும் கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகள் பில்லர் ராக் பகுதியில் மலை மீது தவிழ்ந்து செல்லும் மேகக்கூட்டத்தை பார்த்து ரசிப்பார்கள். அங்கு நின்று செல்பி மற்றும் புகைப்படம் எடுத்து செல்வார்கள்.
இந்த இடத்தினை கண்டு ரசிக்க வனத்துறையினரால் நுழைவு கட்டணம் வசூல் செய்யப்பட்டு வருகிறது. இந்த இடத்தை வாகனங்களில் கடந்து செல்லும் சுற்றுலா பயணிகள் சாலையில் இருந்தபடியே பில்லர் ராக் அழகை கண்டு ரசிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
22 அடி உயரத்தில் சுவர்
இந்தநிலையில் பில்லர் ராக் சுற்றுலா இடத்தின் முகப்பு பகுதியில் திடீரென்று வனத்துறையினர் சுமார் 22 அடி உயரத்தில் சுவர் ஒன்றை கட்டி வருகின்றனர். இதனால் அந்த வழியாக வாகனத்தில் செல்லும் சுற்றுலா பயணிகள் பில்லர் ராக் பகுதியினை கண்டு ரசிக்க முடியாமல் அதிருப்தி அடைந்துள்ளனர். சுவர் கட்டும் பணிக்கு வியாபாரிகள், வாகன டிரைவர்கள் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். மேலும் சுவரை அகற்றி இயற்கை அழகை ரசிப்பதற்கு வழி வகை செய்ய வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து வனத்துறையினரிடம் கேட்டபோது, பில்லர் ராக் பகுதியில் மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருவதாகவும், முகப்பு பகுதியில் எழுப்பியுள்ள சுவரில் கண்கவரும் ஓவியங்கள் மற்றும் பில்லர் ராக் உள்பகுதியில் வனவிலங்குகள் உருவங்கள் அமைக்கப்பட உள்ளது. பாதுகாப்பிற்காக இந்த சுவர் எழுப்பப்பட்டுள்ளது என்றனர்.