பரம்பிக்குளம் அணையில் நீர்மட்டம் குறைந்தது
பரம்பிக்குளம் அணையில் நீர்மட்டம் குறைந்தது. கடந்த ஆண்டை விட 20 அடி சரிந்துள்ளது. இதனால் கோடை காலத்தில் பற்றாக்குறை ஏற்படுமா? என்பதற்கு அதிகாரிகள் பதில் அளித்து உள்ளனர்.
பொள்ளாச்சி
பரம்பிக்குளம் அணையில் நீர்மட்டம் குறைந்தது. கடந்த ஆண்டை விட 20 அடி சரிந்துள்ளது. இதனால் கோடை காலத்தில் பற்றாக்குறை ஏற்படுமா? என்பதற்கு அதிகாரிகள் பதில் அளித்து உள்ளனர்.
பரம்பிக்குளம் அணை
பொள்ளாச்சி அருகே கேரள வனப்பகுதியில் பரம்பிக்குளம் அணை உள்ளது. 72 அடி கொள்ளளவு கொண்ட இந்த அணையில் 17.8 டி.எம்.சி. நீரை தேக்கி வைக்கலாம். இந்த அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் மூலம் திருமூர்த்தி அணை, ஆழியாறு அணைகளுக்கு தண்ணீர் வரத்து ஏற்படுகிறது. இதில் திருமூர்த்தி அணை மூலம் கோவை, திருப்பூர் மாவட்டத்தில் 3 லட்சத்து 77 ஆயிரம் ஏக்கர், ஆழியாறு புதிய ஆயக்கட்டில் 44 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இது தவிர மேற்கண்ட இரு மாவட்டங்களில் குடிநீர் ஆதாரமாக பரம்பிக்குளம் அணை உள்ளது.
இந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் 21-ந்தேதி அணையின் மதகு உடைந்து தண்ணீரில் அடித்து செல்லப்பட்டது. இதன் காரணமாக சுமார் 6 டி.எம்.சி. தண்ணீர் வரை வீணாக கடலுக்கு சென்றது.
இதற்கிடையில் வடகிழக்கு பருவமழையும் எதிர்பார்த்தப்படி பெய்யவில்லை. இதன் காரணமாக பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் குறைந்தது. கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 19-ந்தேதி பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 68 அடியாக இருந்தது. இந்த ஆண்டு நேற்றைய நிலவரப்படி நீர்மட்டம் 48 அடியாக உள்ளது. கடந்த ஆண்டை காட்டிலும் நீர்மட்டம் 20 அடி குறைவாக உள்ளது.
பற்றாக்குறை
ஆழியாறு, திருமூர்த்தி அணைகளில் நீர் இருப்பு குறையும் போது பரம்பிக்குளம் அணையில் இருந்து தான் தண்ணீர் கொண்டு வரப்படுகிறது. ஆனால் பரம்பிக்குளம் அணையில் நீர்இருப்பு மிகவும் குறைவாக உள்ளது. அதே நேரத்தில் ஆழியாறு அணை கடந்த ஆண்டை போன்று, அதே நீர் இருப்பில் தான் உள்ளது. மேலும் பொள்ளாச்சி பகுதிகளில் இனி வருகிற மே மாதம் கோடை மழை, அதை தொடர்ந்து தென்மேற்கு பருவமழை பெய்தால்தான் அணைகளுக்கு நீர் வரத்து இருக்கும்.
கடந்த ஆண்டு பரம்பிக்குளம் அணையில் 17 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு இருந்தது. தற்போது 12 டி.எம்.சி. தான் உள்ளது. இதனால் பாசனத்திற்கும், குடிநீர் தேவைக்கும் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதை சமாளிக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் இப்போது இருந்தே தினமும் நீர்வரத்து, வெளியேற்றம் உள்ளிட்ட விவரங்களை கணக்கீட்டு வருகின்றனர்.
நீர் இருப்பு
இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
பரம்பிக்குளம் அணையில் மதகு பொருத்தும் பணி நிறைவடைந்து விட்டது. மதகு பொருத்துவதற்கு முன் 45 அடி வரை நீர் தேக்கி வைக்கப்பட்டது. தற்போது 46.22 அடி வரை நீர்மட்டம் உயர்ந்து உள்ளது. பரம்பிக்குளம்-ஆழியாறு திட்ட அணைகளில் தற்போது உள்ள நீர்இருப்பு, எதிர்பார்க்கப்படும் நீர் வரத்து ஆகியவை கணக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இதனால் பருவ கால பாசனத்திற்கும், குடிநீருக்கும் மற்றும் கேரளாவுக்கும் தேவையான போதுமான நீர்இருப்பு உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.