மேட்டூர் அணையின் நீர்மட்டம் 119 அடியாக சரிந்தது


மேட்டூர் அணையின் நீர்மட்டம் 119 அடியாக சரிந்தது
x

அணைக்கு வரும் தண்ணீரை விட திறந்து விடப்படும் தண்ணீர் அதிகமாக இருப்பதால் இன்று காலை அணை நீர்மட்டம் 119.89 அடியாக குறைந்துள்ளது.

மேட்டூர்,

நடப்பு ஆண்டு பருவமழை தீவிரமடைந்ததன் காரணமாக மேட்டூர் அணை நீர்மட்டம் கடந்த ஜூலை மாதம் 120 அடி எட்டியது. இந்த ஆண்டில் முதல்முறையாக அணை நிரம்பிய நிலையில் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்துக்கொண்டே வந்தது.

இதனால் அணையில் இருந்து உபரி நீர் 16 கண் மதகுகள் வழியாக திறந்து விடப்பட்டது. இதனிடையே அணைக்கு நீர்வரத்து கடந்த மாதம் முதல் வாரத்தில் படிப்படியாக குறைந்தது. அணைக்கு நீர்வரத்து குறைந்த நிலையிலும் டெல்டா பாசன தேவைக்காக அணையில் இருந்து தொடர்ந்து தண்ணீர் திறந்து விடப்பட்டதன் காரணமாக மேட்டூர் அணை நீர்மட்டம் 120 அடியில் இருந்து குறைய தொடங்கியது.

இருந்தாலும் ஒரு சில நாட்களிலேயே மீண்டும் நீர்வரத்து அதிகரித்ததால் நீர்மட்டம் 120 அடியை மீண்டும் எட்டிப்பிடித்தது. அதாவது கடந்த மாதம் 11-ம் தேதி அணையின் நீர்மட்டம் 120 அடி எட்டியது. அன்று முதல் நேற்று வரை என 45 நாட்களாக நீர்மட்டம் தொடர்ந்து 120 அடியாக நீடித்து வந்தது. இந்த நிலையில் அணைக்கு தொடர்ந்து 4 நாட்களாக 10,400 கன அடியாக நீர்வரத்து இருந்த நிலையில் நேற்று மாலை 4 மணி அளவில் நீர்வரத்து விநாடிக்கு 11,107 கன அடியாக அதிகரித்தது.

இன்று காலையில் நீர்வரத்து மேலும் அதிகரித்து விநாடிக்கு 11,774 கன அடி நீர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து விநாடிக்கு 15,400 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. அதாவது நீர்மின் நிலையங்கள் வழியாக விநாடிக்கு 15 ஆயிரம் கன அடி நீரும், கிழக்கு, மேற்கு கால்வாயில் விநாடிக்கு 400 கன அடி நீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது.

அணைக்கு வரும் தண்ணீரை விட திறந்து விடப்படும் தண்ணீர் அதிகமாக இருப்பதால் இன்று காலை அணை நீர்மட்டம் 119.89 அடியாக குறைந்துள்ளது. 45 நாட்களுக்கு நீர்மட்டம் 120 அடியில் இருந்து சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story