வடக்கு பச்சையாறு அணை நீர்மட்டம் குறைந்தது
களக்காடு வடக்கு பச்சையாறு அணை நீர்மட்டம் குறைந்ததால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.
களக்காடு:
களக்காடு வடக்கு பச்சையாறு அணை நீர்மட்டம் குறைந்ததால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.
பச்சையாறு அணை
நெல்லை மாவட்டம் களக்காடு அருகே மஞ்சுவிளை மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் வடக்கு பச்சையாறு அணை அமைந்துள்ளது. இந்த அணையின் மூலம் களக்காடு, நாங்குநேரி பகுதிகளில் உள்ள 110 குளங்களும், 10 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்களும் பாசன வசதி பெற்று வருகின்றன. இந்த நிலையில் கடந்த ஆண்டு களக்காடு பகுதியில் போதிய மழை பெய்யவில்லை. இதனால் களக்காடு வடக்கு பச்சையாறு அணை நிரம்பவில்லை. அணையின் மொத்த நீர்மட்டம் 50 அடி ஆகும். ஆனால் 17 அடிக்கு மட்டுமே தண்ணீர் தேங்கியது.
நீர்மட்டம் குறைந்தது
கடந்த மாதம் (பிப்ரவரி) 24-ந் தேதி அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது. இதற்கிடையே களக்காடு பகுதியில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் குளங்கள் தண்ணீர் இன்றி வறண்டு வருகின்றன. பச்சையாறு அணையின் நீர்மட்டமும் குறைந்து உள்ளது. நேற்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 6.75 அடியாக இருந்தது. எனவே கடும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் நிலவுவதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.