சோலையாறு அணை நீர்மட்டம் 35 அடியாக குறைந்தது


சோலையாறு அணை நீர்மட்டம் 35 அடியாக குறைந்தது
x
தினத்தந்தி 1 Feb 2023 12:15 AM IST (Updated: 1 Feb 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

வால்பாறையில் உள்ள சோலையாறு அணை நீர்மட்டம் 35 அடியாக குறைந்தது. அங்கு 2 மின் நிலையங்களில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது.

கோயம்புத்தூர்

வால்பாறை

வால்பாறையில் உள்ள சோலையாறு அணை நீர்மட்டம் 35 அடியாக குறைந்தது. அங்கு 2 மின் நிலையங்களில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது.

சோலையாறு அணை

பரம்பிக்குளம் - ஆழியாறு திட்டத்தில் முக்கிய அணையாக வால்பாறை சோலையாறு அணை உள்ளது. 160 அடி நீர் மட்டம் கொண்ட சோலையாறு அணையின் நீர் பிடிப்பு பகுதி 37 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது.

சோலையாறு அணைக்கு 2 மின் நிலையங்கள் உள்ளன. இதில் மின் நிலையம்-1 மூலம் 84 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய் யப்படுகிறது. அதன்பிறகு வெளியேறும் தண்ணீர் பரம்பிக்குளம் அணைக்கு வெளியேற்றப்பட்டு வருகிறது.

சோலையாறு மின் நிலையம் - 2 மூலம் 16 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப் படுகிறது. அதன்பிறகு வெளியேறும் தண்ணீர் ஒப்பந்தப்படி கேரளாவிற்கு வெளியேற்றப்பட்டு வருகிறது.

ஆறுகள் வற்றின

இந்த நிலையில் வால்பாறை பகுதியில் கடந்த அக்டோபர் மாதத்தில் இருந்து பருவமழை நின்று விட்டது. கடுமையான வெயில் வாட்டி வருகிறது. இரவில் கடுங்குளிர் நிலவுகிறது.

சோலையாறு அணைக்கு தண்ணீர் வரத்தை ஏற்படுத்தி தரும் நடுமலை ஆறு, சோலையாறு சுங்கம் ஆறு, வெள்ளமலைஆறு, கூழாங்கல் ஆறு ஆகிய ஆறுகளில் தண்ணீர் வற்றியது.

இதனால் சோலையாறு அணைக்கு தண்ணீர் வரத்து வெகுவாக குறைந்தது. இதன் காரணமாக 160 அடி கொள்ளளவு கொண்ட சோலையாறு அணையின் நீர் மட்டம் நேற்று காலை 6 மணி நிலவரப்படி 35 அடியாக குறைந்தது.

மின்உற்பத்தி நிறுத்தம்

இதனால் அணையில் போதிய தண்ணீர் இல்லாததால் சோலை யாறு மின்நிலையம் -1, மின் நிலையம் -2 ஆகிய மின் நிலையங்க ளுக்கு தண்ணீர் திறந்து விட முடியாத நிலை உள்ளது. இதன் காரணமாக அந்த 2 மின் நிலையங்களிலும் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டு உள்ளது.

நீர்மட்டம் மிக குறைவாக உள்ள நிலையில் மின் உற்பத்திக்கு தண்ணீர் திறந்தால் சேறும் சகதியும் கலந்து வரும். இதனால் மின் உற்பத்தி மோட்டார்கள் பழுதடைந்து விடும்.

ஆனாலும் ஒப்பந் தப்படி கேரளாவிற்கு தண்ணீர் தரவேண்டி உள்ளது. எனவே மின் உற்பத்தி செய்யாமல் கேரளாவுக்கு மாற்றுப் பாதை வழியாக 300 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

நீர்மட்டம் குறைந்ததால் சோலையாறு அணை மற்றும் பூங்காவில் சீரமைப்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.


Next Story